குல்தீப் யாதவின் சுழலில் சுருண்ட நியூசிலாந்து! இரண்டாவது போட்டியிலும் அசத்தல் வெற்றி பெற்ற இந்தியா

Report Print Kabilan in கிரிக்கெட்

பே ஓவல் மைதானத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி மவுங்கனுவின் பே ஓவல் மைதானத்தில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களின் நிலையான ஆட்டம் முதல் விக்கெட்டுக்கு 150 சேர்த்தது.

ஷிகர் தவான் 67 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் கேப்டன் விராட் கோஹ்லி களமிறங்கிய நிலையில், ரோஹித் ஷர்மா 87 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவர் 3 சிக்சர், 9 பவுண்டரிகள் விளாசினார்.

கோஹ்லி தனது பங்குக்கு 43 ஓட்டங்களும், அம்பத்தி ராயுடு 47 ஓட்டங்களும் எடுத்து அவுட் ஆனார்கள். கடைசி கட்டத்தில் டோனியின் அதிரடியால் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 324 ஓட்டங்கள் குவித்தது.

டோனி 33 பந்துகளில் 48 ஓட்டங்களுடனும், கேதார் ஜாதவ் 10 பந்துகளில் 22 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிரெண்ட் போல்ட், பெர்குசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

AFP

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் கப்தில் 15 ஓட்டங்களும், முன்ரோ 31 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.

அவர்களைத் தொடர்ந்து வந்த கேப்டன் வில்லியம்சன்(20), ராஸ் டெய்லர்(22) ஆகியோரும் ஏமாற்றினர்.

பின்னர் வந்த டாம் லாதமை 34 ஓட்டங்களிலும், நிக்கோலஸை 28 ஓட்டங்களிலும் குல்தீப் யாதவ் வெளியேற்றினார்.

பிரேஸ்வெல் மட்டும் அரைசதம் அடித்த நிலையில், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆனதால் நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 234 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன்மூலம் இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர்குமார் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Chris James

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்