அதிரடி இரட்டை சதம்.. விஸ்வரூபமெடுத்த ஹோல்டர்! கதிகலங்கிய இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டரின் இரட்டை சதத்தால், இங்கிலாந்து அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பார்படாஸில் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி துடுப்பாட்டத்தை துவங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் இன்னிங்சில் 289 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதிகபட்சமாக ஹெட்மையர் 81 ஓட்டங்களும், ஹோப் 57 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளையும், ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

AFP

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 77 ஓட்டங்களுக்கு சுருண்டது. கேமர் ரோச் 5 விக்கெட்டுகளையும், ஹோல்டர் மற்றும் ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதன்மூலம் 212 ஓட்டங்கள் முன்னிலையுடன் மேற்கிந்திய தீவுகள் அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.

ஆனால், மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. மோயீன் அலி, ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் அந்த அணி 120 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அப்போது கேப்டன் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷான் டவ்ரிச் இருவரும் கைகோர்த்தனர். அதிரடியில் இறங்கிய ஹோல்டர், இங்கிலாந்தின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். பவுண்டரிகளும், சிக்சர்களுமாக பறக்கவிட்ட அவர் 99 பந்துகளில் சதம் அடித்தார்.

AFP

மறுபுறம் நிதானமாக விளையாடிய டவ்ரிச் அரைசதம் கடந்தார். இவர்களின் ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

சதமடித்த டவ்ரிச் 224 பந்துகளில் 11 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 116 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார். சதத்திற்கு பின்னரும் அதிரடி காட்டிய ஹோல்டர் இரட்டை சதம் அடித்தார். இதில் 8 சிக்சர்கள், 23 பவுண்டரிகளும் அடங்கும்.

அவர் 229 பந்துகளில் 202 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 6 விக்கெட்டுக்கு 415 ஆக இருந்தது. அதனைத் தொடர்ந்து இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக ஹோல்டர் அறிவித்தார்.

ஹோல்டர்-டவ்ரிச் கூட்டணி 295 ஓட்டங்கள் குவித்தது. இது டெஸ்ட் வரலாற்றில் 7வது விக்கெட் கூட்டணி குவித்த சிறந்த ஸ்கோர் ஆகும். இங்கிலாந்து வீரர்களால் கடைசி வரை இந்த கூட்டணியை பிரிக்க முடியவில்லை.

ஜேசன் ஹோல்டர் 8வது டவுனில் இறங்கி இரட்டை சதம் விளாசிய 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் இன்னிங்சில் 8 சிக்சர்கள் விளாசிய முதல் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 212 ஓட்டங்கள் முன்னிலை பெற்றதால், இங்கிலாந்து அணிக்கு 628 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 56 ஓட்டங்கள் எடுத்தது.

பர்ன்ஸ் 39 ஓட்டங்களுடனும், ஜென்னிங்ஸ் 11 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இரண்டு நாட்கள் எஞ்சியுள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்