முதல் போட்டியிலே நியூசிலாந்து அணியை கதறவிட்ட இந்தியா! அபார வெற்றி பெற்ற கோஹ்லி படை

Report Print Kabilan in கிரிக்கெட்

நேப்பியரில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரின் மெக்லீன் பார்க் மைதானத்தில் நடந்தது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தொடக்க வீரர்கள் கப்தில் மற்றும் மூன்ரோ இருவரின் விக்கெட்டையும் ஷமி கைப்பற்றினார். அதன் பின்னர் வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.

சுழற்பந்து வீச்சாளர்கள் சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் நியூசிலாந்தின் விக்கெட்டுகளை காலி செய்தனர். இதனால் நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 81 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஷமி 3 விக்கெட்டுகளையும், சஹால் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன் பின்னர் இந்திய அணி களமிறங்கியது.

ரோஹித் ஷர்மா 11 ஓட்டங்களில் அவுட் ஆனதைத் தொடர்ந்து, கேப்டன் விராட் கோஹ்லி களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 44 ஆக இருந்தபோது அதிக சூரிய ஒளியால் ஆட்டம் தடைபட்டது. அதாவது மைதானத்தில் ஆடுகளம் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது.

இதனால் துடுப்பாட்ட வீரர்களுக்கு சூரிய ஒளி இடையூறாக இருந்ததைத் தொடர்ந்து, கள நடுவர்கள் வீரர்களின் பாதுகாப்பு கருதி ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினர். பின்னர் ஒரு ஓவர் மட்டும் குறைக்கப்பட்டு, 156 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது.

BCCI

விராட் கோஹ்லி 45 ஓட்டங்களில் இருந்தபோது பெர்குசன் பந்துவீச்சில் அவுட் ஆனார். அதன் பின்னர் ராயுடு களமிறங்கினார். அரைசதம் கடந்த ஷிகார் தவான் 103 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்திய அணி 34.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 156 ஓட்டங்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers