குல்தீப்பின் சுழலில் ஆல்-அவுட் ஆன அவுஸ்திரேலியா! 5 விக்கெட் எடுத்து அசத்தல்

Report Print Kabilan in கிரிக்கெட்

சிட்னியில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியா அணி 300 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 622 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் ஹரிஸ் 79 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் தங்கள் பங்குக்கு ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

3ஆம் நாள் ஆட்டத்தின்போது அவுஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 236 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது.

ஆனால், இன்றும் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கியபோது, நேற்றைய ஸ்கோருடனே கம்மின்ஸ்(25) அவுட் ஆனார்.

அதன் பிறகு ஹேண்ட்ஸ்கோம்ப் 37 ஓட்டங்களில் வெளியேறினார். நேற்று 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த குல்தீப் யாதவ், இன்றும் தனது சுழல் பந்துவீச்சால் அவுஸ்திரேலியாவை திணறடித்தார்.

நாதன் லயனை ஓட்டங்கள் எதுவும் எடுக்காத நிலையிலும், ஹேசல்வுட்டை 21 ஓட்டங்களிலும் குல்தீப் வெளியேற்றினார். இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 300 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

கடைசி கட்டத்தில் நிதானமாக ஓட்டங்கள் எடுத்த ஸ்டார்க் 29 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், ஷமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இந்தியாவை விட முதல் இன்னிங்சில் 322 ஓட்டங்கள் பின்தங்கியதால் அவுஸ்திரேலியா பாலோ-ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது.

AFP

Getty

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers