நான் அணிக்கு மீண்டும் திரும்புவதை அப்ரிடி தடுத்தார்! முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், தான் அணியில் மீண்டும் இணைவதை அப்ரிடி தடுத்ததாக பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது அந்த அணி வீரர்களான முகமது ஆமிர், சல்மான் பட், முகமது ஆசிப் ஆகியோர் சூதாட்ட புகாரில் சிக்கினர்.

அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, மூன்று பேருக்கும் தலா 5 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், தடைகாலம் முடிந்ததும் முகமது ஆமிர் அணிக்கு திரும்பினார்.

ஆனால், முன்னாள் கேப்டனான சல்மான் பட் மற்றும் ஆசிப் ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. தான் அணியில் சேர்க்கப்படாததற்கு காரணம் ஷாகித் அப்ரிடி தான் என்று தற்போது சல்மான் பட் புகார் கூறியுள்ளார்.

Getty Images

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண தொடருக்கான பாகிஸ்தான் அணியில் நான் இடம்பிடித்திருப்பேன். அப்போது கேப்டனாக இருந்த அப்ரிடி அதைத் தடுத்தார்.

தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ், துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் ஆகியோர் என்னை வலைப்பயிற்சி எடுக்கக் கூறி உடற்தகுதியை சோதனை செய்தனர். வக்கார் யூனிஸ், பாகிஸ்தான் அணிக்காக விளையாட மனதளவில் தயாரா? என்று கேட்டார். நான் தயார் என்றேன்.

ஆனால், கேப்டனாக இருந்த அப்ரிடி நான் அணிக்கு திரும்புவதை தடுத்துவிட்டார். அவரைத் தூண்டியது யார் என்பது தெரியாது. இதுகுறித்து அவரிடம் நான் பேசவில்லை. 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பேன் என்று நினைத்தேன்.

அதிலும் இடம் கிடைக்கவில்லை. அணி நிர்வாகம் என்னிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார். சல்மான் பட்டின் இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers