எங்கள் வெற்றி இத்துடன் நிற்காது: விராட் கோஹ்லி உற்சாகம்

Report Print Kabilan in கிரிக்கெட்

எங்களின் வெற்றியை மெல்போர்ன் டெஸ்ட் போட்டியுடன் நிறுத்த மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் வெற்றி குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், ‘எங்கள் வெற்றியை இதோடு நிறுத்த மாட்டோம். இந்த வெற்றியின் மூலம் அடுத்து சிட்னியில் நடக்க இருக்கும் போட்டிக்கு அதிக நம்பிக்கை கிடைத்திருக்கிறது.

துடுப்பாட்டம், பீல்டிங், பந்துவீச்சு என மூன்று துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். அதனால் தான் நாங்கள் பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை தக்க வைத்துள்ளோம். இதை தொடர வேண்டும். இதே போல தான் தென் ஆப்பிரிக்காவிலும் விளையாடினோம்.

Reuters

எங்களைப் பற்றிய எந்த கமெண்ட்களையும், கருத்துக்களையும் நான் படிக்கவில்லை. அதை தொடரவும் இல்லை. அதிக ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தினோம். நான்கு மற்றும் 5வது நாளில் இந்த பிட்ச்சில் ஆடுவது கடினம் என்று எங்களுக்கு தெரியும்.

எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வீழ்த்தினார்கள். குறிப்பாக பும்ரா நன்றாக விளையாடினார். இதற்கு இந்தியாவில் நடக்கும் முதல் தர போட்டிகள் தான் காரணம். மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரோஹித் ஆகியோரும் நன்றாக விளையாடினார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எங்கள் வேகத்தை யாரும் தடுத்துவிட முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்