அவுஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இந்தியா! பாக்சிங் டே டெஸ்டில் அபார வெற்றி

Report Print Kabilan in கிரிக்கெட்

மெல்போர்னில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.

கிறிஸ்துமஸிற்கு அடுத்த நாள் தொடங்கியதால் பாக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த போட்டியில், இந்திய அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.

புஜாரா, கோஹ்லி, மயங்க் அகர்வாலின் அபார ஆட்டத்தினால் 7 விக்கெட் இழப்புக்கு 443 ஓட்டங்கள் குவித்து இந்தியா டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 151 ஓட்டங்களுக்கு சுருண்டது. பும்ரா 6 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

AP

பின்னர் 292 ஓட்டங்கள் முன்னிலையுடன் பாலோ-ஆன் கொடுக்காமல் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், அவுஸ்திரேலியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன.

இந்நிலையில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதனால் அவுஸ்திரேலியா அணிக்கு 399 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் ஹரிஸ், பின்ச் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். பின்னர் வந்த கவாஜா 33 ஓட்டங்களும், ஷான் மார்ஷ் 44 ஓட்டங்களும் எடுத்து அவுட் ஆகினர்.

அதன் பின்னர் 4வது நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 258 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கம்மின்ஸ் 61 ஓட்டங்களுடனும், லயன் 6 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. காலையில் மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை. பின்னர் ஆட்டம் தொடங்கியபோது கம்மின்ஸ் 63 ஓட்டங்களில் பும்ரா பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து லயனை 7 ஓட்டங்களில் இஷாந்த் ஷர்மா அவுட் செய்ய, அவுஸ்திரேலியா 261 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா மற்றும் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Reuters

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers