கடைசி வரை நங்கூரம் போல் நின்ற மேத்யூஸ்! பரிதாபமாக விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 104 ஓட்டங்களுக்கு சுருண்டது.

கிறிஸ்ட்சர்ச்சில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி சுரங்கா லக்மலின் அபார பந்துவீச்சினால் 178 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக டிம் சௌதி 68 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் லக்மல் 5 விக்கெட்டுகளும், லஹிரு குமார 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இன்று நடந்த 2ஆம் நாள் ஆட்டத்தில் மேத்யூஸ் மற்றும் ரோஷன் சில்வாவை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் அவுட் ஆகினர். சில்வா 21 ஓட்டங்களில் வெளியேறினார்.

இலங்கை அணியின் கடைசி 6 விக்கெட்டுகளையும் டிரெண்ட் போல்ட் கைப்பற்றினார். அதில் 4 வீரர்கள் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தனர். இந்த விக்கெட்டுகள் அனைத்தும் 15 பந்துகள் இடைவெளியில் சரிந்தவையாகும்.

கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்ற ஏஞ்சலோ மேத்யூஸ் 33 ஓட்டங்கள் எடுத்திருந்தார். டிரண்ட் போல்ட் 15 ஓவர்கள் பந்துவீசி 30 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே டெஸ்ட் அரங்கில் அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்.

பின்னர் 74 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடிய நியூசிலாந்து அணியில், தொடக்க வீரர் ஜீத் ராவல் 74 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார். பின்னர் வந்த கேப்டன் வில்லியம்சன் 48 ஓட்டங்கள் எடுத்தார்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 231 ஓட்டங்கள் எடுத்துள்ளது. டாம் லாதம் 74 ஓட்டங்களுடனும், ராஸ் டெய்லர் 25 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி இலங்கையை விட 305 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers