மீண்டும் தன்னை நிரூபித்த ஏஞ்சலோ மேத்யூஸ்! பயிற்சி ஆட்டத்தில் அசத்தல்

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அபார சதம் விளாசியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் திகதி தொடங்க உள்ளது.

இதற்கு முன்பாக, நியூசிலாந்து லெவன் அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி விளையாடுகிறது. நேபியரில் இன்று தொடங்கிய இந்த பயிற்சி ஆட்டத்தில், இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.

தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், பின்னர் வந்த கேப்டன் தினேஷ் சண்டிமல் 26 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், அவருக்கு துணையாக எந்த வீரரும் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், மேத்யூஸ் தான் சந்தித்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.

அவ்வப்போது சிக்சர்களும் அடித்த மேத்யூஸ் சதம் விளாசினார். எனினும் ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால், இலங்கை அணி 59 ஓவர்களில் 210 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மேத்யூஸ் 177 பந்துகளில் 128 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 3 சிக்சர் மற்றும் 19 பவுண்டரிகள் அடங்கும். நியூசிலாந்து லெவன் தரப்பில் பிளேக் கோபர்ன் 3 விக்கெட்டுகளும், ஸ்னீடென் மற்றும் பீட்டர் யெங்ஹஸ்பண்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து லெவன் அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 31 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 67 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சந்தீப் படேல் 14 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers