பல்லேகெலேயில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகலேயில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 290 ஓட்டங்களும், இலங்கை அணி 336 ஓட்டங்களும் எடுத்தன.
அதன் பின்னர், 46 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 346 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அணித்தலைவர் ஜோ ரூட் 124 ஓட்டங்கள் குவித்தார். இலங்கை தரப்பில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, 301 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது. தொடக்க வீரர் கருணரத்னே 57 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 88 ஓட்டங்கள் எடுத்தார்.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு இன்னும் 75 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், இலங்கை அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தினை தொடங்கியது.
இங்கிலாந்து வீரர் மொயின் அலி, 35 ஓட்டங்கள் எடுத்திருந்த டிக்வெல்லவை அவுட் ஆக்கினார். அதன் பின்னர் வந்த அணித்தலைவர் லக்மலையும் ஆட்டமிழக்கச் செய்தார் மொயின் அலி.
பின்னர் கடைசி விக்கெட்டான புஷ்பகுமாரவை ஒரு ரன்னில் ஜேக் லீச் வெளியேற்ற, இலங்கை அணி 243 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 5 விக்கெட்டுகளையும், மொயின் அலி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே, காலேயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
மேலும், 17 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து அணி இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு நாசர் ஹுசைன் தலைமையில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வென்றிருந்தது.
