227 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்! டிரெண்ட் போல்ட் அபார பந்துவீச்சு

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், பாகிஸ்தான் அணி 227 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அபுதாபியில் தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டம் செய்து 153 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 63 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 6 ஓட்டங்களிலும், டிரெண்ட் போல்டின் அபார பந்துவீச்சில் முகமது ஹபீஸ் 20 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த அசார் அலியையும் 22 ஓட்டங்களில் போல்ட் வெளியேற்றினார்.

அதன் பின்னர் ஹரிஸ் சோகைல்(38), அசாத் ஷபிக்(43) ஓரளவு நல்ல ஸ்கோர் எடுத்து அவுட் ஆகினர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 227 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

பாபர் அசாம் 62 ஓட்டங்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், கிராண்ட்ஹோம் மற்றும் அஜஸ் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்நிலையில், 74 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி, 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 22.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ஓட்டங்கள் எடுத்தது. ஜீத் ராவல் 26 ஓட்டங்களுடனும், கேன் வில்லியம்சன் 27 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்