அவுஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 282 ஓட்டங்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல்-அவுட் ஆகியுள்ளது.
அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, அபிதாபியில் இன்று தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தெரிவு செய்தது.
அதன்படி, பஹார் ஜமான் மற்றும் ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஹபீஸ் 4 ஓட்டங்களிலேயே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த அசார் அலி 15 ஓட்டங்களில் வெளியேற, பாகிஸ்தான் அணி நாதன் லயனின் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதனால் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதன் பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் சர்ப்பராஸ் அகமது, பஹார் ஜமானுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.
அறிமுக டெஸ்டில் விளையாடிய ஜமான் அரைசதத்தை கடந்தார். பின்னர் சர்ப்பராஸ் அகமதும் அரைசதம் அடித்தார். இருவரின் பொறுப்பான ஆட்டத்தினால் பாகிஸ்தான் அணி 200 ஓட்டங்களை கடந்தது.
இந்நிலையில், பஹார் ஜமான் 94 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதன் பின்னர் களம் இறங்கிய பிலால் ஆசிப் 12 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
அணித்தலைவர் சர்ப்பராஸ் அகமது 94 ஓட்டங்களில் சிடிலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் முகமது அப்பாஸின் கடைசி விக்கெட்டை மார்ஷ் வீழ்த்தியதும், பாகிஸ்தான் அணி 282 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அவுஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுகளையும், மர்னஸ் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
