தவான் அதிரடியில் நொறுங்கியது ஹாங்காங்: இந்தியா போராடி வெற்றி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

ஆசிய கிண்ணம் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

ஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரின் 4வது போட்டி இன்று துபாயில் நடைப்பெற்று வருகிறது. இதில் இந்தியா -ஹாங்காங் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

நாணய சுழற்சியில் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 23 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானாலும், மறு முனையில் தவான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

தவானுடன் ராயுடு இணைந்து இந்தியாவுக்கு நல்ல ரன் எடுக்க உதவினர். தவான் 127, ராயுடு 60 என அவுட்டாக, தினேஷ் கார்த்திக் 33 ஓட்டங்கள் சேர்த்தார்.

பின்னர் வந்த டோனி(0), புவனேஸ்வர் குமார்(9), சர்துல் தாகூர்(0) என வரிசையாக நடையை கட்ட, கடைசி வரை ஆட்டமிழக்காமல் கேதார் ஜாதவ் 28 ஓட்டங்கள் எடுத்து அணியை 285 ஓட்டங்கள் கடக்க உதவினார்.

அடித்து ஆட வேண்டிய கடைசி நேரத்தில் இந்தியாவின் விக்கெட் வரிசையாக சரிந்ததால் இந்திய அணி ஓட்டங்கள் குவிக்க திணறியது.

கடைசி 10 ஓவரில் ஒரே ஒரு சிக்ஸர், ஒரே ஒரு பவுண்டரி அடித்து 49 ஓட்டங்கள் மட்டும் இந்தியா எடுத்தது.

ஹாங்காங் அணியில் கின்சிட் ஷா 3 விக்கெட் , ஈஷன் கான் 2 விக்கெட் , அய்ஜஜ் கான், ஈஷான் நவாஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து ஹாங் காங் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிசாகத் கான் மற்றும் அணித்தலைவர் அன்சுமன் ராத் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடியாக ஆடத்தொடங்கிய இவர்கள் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை நான்கு புறமும் சிதறடித்தனர்.

அந்த அணியின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி சீராக உயர்ந்ததால் ஹாங் காங் அணி வெற்றியை நோக்கி சென்றது, இதனால் இந்திய வீரர்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டது. முதல் விக்கெட்டுக்கு அந்த ஜோடி 174 ஓட்டங்களை குவித்து அசத்தியது.

ஆனால், குல்தீப் யாதவ் வீசிய 34-வது ஓவரில் அன்சுமன் ராத் ரோகித் சர்மாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 97 பந்துகளில் 73 ஓட்டங்கள் குவித்தார்.

அடுத்து சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிசாகத் கான் 92 ஓட்டங்களில் அறிமுக வீரர் கலீல் அகமது பந்தில் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன் பின்னர் இந்திய வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. இதனால், அடுத்து களமிறங்கிய கார்டர் 3, பாபர் 18, ஷா 17, ஐஷாஸ் 0, எஸ்சான் 22 ஓட்டங்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து ஹாங் காங் அணி தடுமாறியது. இதனால் 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்கள் மட்டுமே அடித்ததால் இந்திய அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் கலீல் அகமது மற்றும் சாகல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

சிறப்பாக விளையாடி சதமசித்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பாட்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்