இலங்கை அணியின் கனவை சுக்கு நூறாக்கிய ஆப்கானிஸ்தான்! அதிக ஓட்டங்கள் குவித்து சாதனை

Report Print Santhan in கிரிக்கெட்

ஆசியக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அபுதாபியில் பி பிரிவில் நடந்த லீக் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

முதல் போட்டியில் வங்கதேச அணியுடன் தோல்வியை சந்தித்த இலங்கை அணி, இந்த போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி விளையாடியது.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அந்தணிக்கு துவக்க வீரர்களாக முகமது ஷேசாத், ஜனத் களமிறங்கினர். மலிங்கா, துஷ்மந்தா சமீரா, திசாரா பெரோ பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஷாஜத், அகிலா தனஞ்செயா பந்தில் ஒரு சிக்சர் விளாசினார்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 57 ஓட்டங்கள் சேர்த்த போது தனஞ்செயா சுழலில் ஷாஜத் (33) அவுட்டானார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த இஷானுல்லா, திசாரா பெரேரா வீசிய 19-வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார்.

இவர், 45 ஓட்டங்கள் எடுத்திருந்த போது தனஞ்செயா பந்தில் வெளியேறினார். ஷேஹன் ஜெயசூர்யா சுழலில் தலைவர் அஸ்கர் (1) பெவிலியன் திரும்பினார்.

அதன் பின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மத் ஷா நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். திசாரா பெரேரா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய இவர் அரைசதமடித்தார்.

தனஞ்செயா, மலிங்கா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த ரஹ்மத், 72 ஓட்டம் எடுத்த போது சமீரா பந்தில் ஆட்டமிழந்தார்

இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஹஸ்மதுல்லா ஷஹிதி (37) ஓரளவு கைகொடுத்ததால், ஆப்கானிஸ்தான் அணியின் ரன் விகிதம் சீரான வேகத்தில் எகிறியது.

இவரைத் தொடர்ந்து அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொதப்பியதால், ஆப்கானிஸ்தான் அணி 249 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இலங்கை அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் திசாரா பெரேரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முஜீப் ரஹ்மான் வீசிய முதல் ஓவரில் குசால் மெண்டிஸ்(0)அவுட்டானார்.

குல்பதின் பந்தை சிக்சருக்கு அனுப்பிய தனஞ்செயா டி சில்வா (23) ரன்–அவுட் ஆனார்.

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்தி சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் சுழலில் குசால் பெரேரா (17) போல்டானார். பொறுப்பாக ஆடிய உபுல் தரங்கா (36) ஓரளவு கைகொடுத்தார்.

ஷேஹன் ஜெயசூர்யா (14) ரன்–அவுட் ஆனார். முகமது நபி சுழலில் சிக்கிய தலைவர் மேத்யூஸ் (22) நிலைக்கவில்லை.

அடுத்து வந்த தசன் ஷனகா (0), அகிலா தனஞ்செயா (2) ஏமாற்றினர். திசாரா பெரேரா (28) ஆறுதல் தந்தார். ரஷித் பந்தில் மலிங்கா (1) ஆட்டமிழந்தார்.

இதனால் இலங்கை அணி 41.2 ஓவரில் 158 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட்டானதால், 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முஜீப், ரஷித் கான், மொகமது நபி, நயிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் பி பிரிவில் இருந்து வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர்–4 சுற்றுக்குள் நுழைந்தன.

இரண்டு தோல்விகளை சந்தித்த இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

மேலும் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 249 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில் இலங்கைக்கு எதிராக தனது அதிகபட்ச ஓட்டத்தை அந்தணி பதிவு செய்தது.

இதற்கு முன், 2015-ஆம் ஆண்டு டுனிடினில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 232 ஓட்டங்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers