கௌதமனின் அதிரடி கைகொடுக்க இலங்கை கிரிக்கெட் சபையின் கிண்ணத்தை வென்ற சென்றலைட்ஸ் அணி!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

கட்டுக்கோப்பான பந்துவீச்சு, சிறப்பான களத்தடுப்பு என்பன எதிரணியின் ஆட்டங்களை கட்டுப்படுத்த, கௌதமனின் சிறப்பான துடுப்பாட்டம் வெற்றியிலக்கை இலகுவாக அடையும் வழிகோல, சென்றலைட்ஸ் அணி, டிவிஸன் – 111 வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது.

இலங்கை கிரிக்கெட் சபையின் பிரிவு – 111 அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

இதில், யாழ்.மாவட்ட பிரிவு -111 அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியானது 9 ஆம் திகதி சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து விக்டோரியன்ஸ் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்ற சென்றலைட்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கிணங்க களமிறங்கிய விக்டோரியன்ஸ் அணி, தொடக்கத்தில் கடுமையாக தடுமாறியது. ஒரு கட்டத்தில், 60 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பிரணவன் – சாரங்கன் ஜோடி அணியை தூக்கி நிறுத்தியது. பிரணவன் 56 ஓட்டங்களையும், சாரங்கள் 50 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

விக்டோரியன்ஸ் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் சென்றலைட்ஸ் அணி சார்பாக, எரிக்துசாந்த் 3 விக்கெட்களையும், சுஜன், அலன்ராஜ், டர்வின் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

190 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய சென்றலைட்ஸ் அணி, ஜெனோசன், கௌதமன் மற்றும் ஜெரிக்துசாந்த் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால், 32.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் கௌதமன் 70 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காதிருந்ததுடன், கூடவே ஜெரிக்துசாந்த் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலும் இருந்தனர். ஜெனோசன் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் விக்டோரியன்ஸ் அணி சார்பாக, சுஜிதரன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தச் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக சென்றலைட்ஸ் அணியின் கௌதமனனும், சிறந்த துடுப்பாட்ட வீரராக விக்டோரியன்ஸ் அணியின் பிரணவனும், சிறந்த பந்துவீச்சாளராக சென்றலைட்ஸ் அணியின் ஜெரிக் துசாந்தும், சிறந்த களத்தடுப்பாளராக அதே அணியின் ஜெனோசனும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...