இங்கிலாந்திடம் மோசமாக தோற்கவில்லை: விராட் கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற டெஸ்ட்களில் மோசமாக தோற்கவில்லை என இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 118 ஓட்டங்கள் தோல்வியை தழுவியது. இதனால் 1-4 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது.

இங்கிலாந்து நிர்ணயித்த 464 ஓட்டங்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா அணியில், ராகுல் மற்றும் ரிஷப்பின் அபார ஆட்டத்தால் 345 ஓட்டங்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், ‘நாங்கள் 1-4 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளோம். இது மோசம் இல்லை. பரவாயில்லை என்று தான் நினைக்கிறேன். ஏனெனில் இங்கிலாந்து அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது.

லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற டெஸ்ட்களில் நாங்கள் மோசமாக தோற்கவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் நன்றாக விளையாடின. இதனால் கடும் போட்டி இருந்தது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான இந்த தொடர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான சிறந்த விளம்பரம் ஆகும். இரு அணிகளும் வெற்றிக்காக விளையாடியதால் ரசிகர்கள் மைதானத்துக்கு திரண்டு வந்தார்கள்.

இங்கிலாந்து அணி தொழில் ரீதியாக பயமில்லாமல் ஆடியது. இரண்டு அல்லது 3 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட முடியும் என்பதை உணர்ந்து இருந்தனர். அவர்கள் டிரா செய்ய வேண்டும் என்ற வகையில் ஆடவில்லை.

இந்த தொடர் மூலம் நாங்கள் நிறைய விடயங்களை அறிந்தோம். இந்த தொடரில் இங்கிலாந்து அணியில் சாம் குர்ரன் சிறப்பாக செயல்பட்டார்.

ஓய்வு பெற்ற அலஸ்டர் குக் இங்கிலாந்தில் சிறந்த துடுப்பாட்ட வீரர் ஆவார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

GETTY IMAGES

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers