தென் ஆப்பிரிக்காவை 3 ஓட்டங்களில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற இலங்கை

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

இலங்கை- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

தென் ஆப்பிரிக்க அணி 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை வென்றுள்ள நிலையில், 4வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

பல்லெகலேயில் நடந்த இந்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

மழையின் காரணமாக இந்த போட்டி 39 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இலங்கையின் தொடக்க வீரர்கள் டிக்வெல்ல 34 ஓட்டங்களும், தரங்கா 36 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின்னர், குசால் மெண்டிஸ் 14 ஓட்டங்களில் மகாராஜ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

எனினும், குசால் பெரேரா அதிரடி காட்டினார். அணியின் ஸ்கோர் 159 ஆக உயர்ந்தபோது, அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் 22 ஓட்டங்களில் அவுட் ஆனார். பின்னர் வந்த டி சில்வா 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து, 32 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்திருந்த குசால் பெரேரா அவுட் ஆனார். இதனால் இலங்கையின் ஸ்கோர் சற்று சரிந்தது. அப்போது களமிறங்கிய தசுன் ஷனகா, சிக்ஸர்களை பறக்கவிட்டு இலங்கையின் ஸ்கோரை மள மளவென உயர்த்தினார்.

மறுபுறம் திசாரா பெரேராவும் அதிரடி காட்ட, இலங்கை அணி 300 ஓட்டங்களை எட்டியது. ஷனகா 34 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 65 ஓட்டங்கள் விளாசினார். இலங்கை அணி 39 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்கள் குவித்தது.

AFP

திசாரா பெரேரா 45 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி, டுமினி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அதிரடி காட்டினாலும், விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இலங்கையின் அச்சுறுத்தலான பந்துவீச்சினால் நிலைகுலைந்த தென் ஆப்பிரிக்கா அணி 21 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

பின்னர், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஆம்லா 40 ஓட்டங்களும், டுமினி 38 ஓட்டங்களும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் லக்மல் 3 விக்கெட்டுகளையும், திசாரா பெரேரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 65 ஓட்டங்கள் குவித்த ஷனகா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

AFP/ISHARA S.KODIKARA

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers