தென் ஆப்பிரிக்காவை 124 ஓட்டங்களில் சுருட்டிய தனஞ்ஜெய மற்றும் பெரேரா: முன்னிலை பெற்ற இலங்கை

Report Print Kabilan in கிரிக்கெட்

கொழும்பில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 365 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கொழும்பில் இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இலங்கை அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இலங்கை தரப்பில் குணதிலக 57 ஓட்டங்களும், கருணரத்னே 53 ஓட்டங்களும், டி சில்வா 60 ஓட்டங்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகாராஜ் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில், 2ஆம் நாளான இன்று தொடர்ந்து விளையாடிய இலங்கை அணியில், தனஞ்ஜெயா(43) மற்றும் ஹேராத்தின்(35) சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 338 ஓட்டங்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

தென் ஆப்பிரிக்காவின் மகாராஜ் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம், 9 விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார்.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இலங்கையின் தனஞ்ஜெய மற்றும் பெரேராவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மற்ற வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், தென் ஆப்பிரிக்கா 124 ஓட்டங்களில் சுருண்டது.

Reuters

அந்த அணியில் அதிகபட்சமாக டூபிளிசிஸ் 48 ஓட்டங்களும், டி காக் 32 ஓட்டங்களும் எடுத்தனர். ஆம்லா 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். எனினும் அவர் டெஸ்ட் அரங்கில் 9000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன்மூலம், 9000 ஓட்டங்கள் எடுத்தவர்களில் தென் ஆப்பிரிக்க அளவில் 3வது வீரர் மற்றும் உலகளவில் 15வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இலங்கை தரப்பில் தனஞ்ஜெய 5 விக்கெட்டுகளும், பெரேரா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட தொடங்கியது. தொடக்க வீரர் குணதிலக 61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த டி சில்வா ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும், குசால் மெண்டிஸ் 18 ஓட்டங்களிலும் அவுட் ஆகினர். எனினும், நிலைத்து நின்று ஆடிய கருணரத்னே அரைசதம் அடித்தார். 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 34 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கருணரத்னே 59 ஓட்டங்களுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் மகாராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை அணி இதுவரை 365 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers