இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் மகாராஜ் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையில் இணைந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், கொழும்புவில் 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடியது. முதல் நாள் முடிவில் இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று 2ஆம் நாள் ஆட்டத்தினை தொடர்ந்த இலங்கை, 338 ஓட்டங்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக தனஞ்செய டி சில்வா 60 ஓட்டங்களும், குணதிலக 57 ஓட்டங்களும், கருணரத்னே 53 ஓட்டங்களும் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் கேசவ் மகாராஜ் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 41.1 ஓவர்கள் வீசிய அவர் 129 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 10 ஓவர்களை மெய்டன் செய்திருந்தார்.

இதன்மூலம், ஒரே இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை மகாராஜ் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு, கடந்த 1957ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஹக் டைஃபீல்டு, 113 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதே, தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சாக இருந்து வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் இந்த சாதனையை செய்திருந்தார்.

Reuters

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்