கோஹ்லி இதனை செய்ய வேண்டும்: இந்திய முன்னாள் வீரர் கங்குலி அறிவுரை

Report Print Kabilan in கிரிக்கெட்

துடுப்பாட்ட வரிசையில் ராகுலை 4வது வீரராக களம் இறக்க வேண்டும் என கோஹ்லிக்கு, இந்திய முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆனால், ஒருநாள் தொடரை 1-2 என இழந்தது.

கடைசி ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததற்கு வீரர்களின் தேர்வு முறை தான் காரணம் என இந்திய முன்னாள் வீரரும், தற்போதைய தொலைக்காட்சி வர்ணனையாளருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘சிறந்த துடுப்பாட்ட வீரர்களான ரகானே, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை. அடிக்கடி நடுவரிசையை மாற்றி சோதிப்பது, முன்கள துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையில் ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி ஆகியோர் சர்வதேச அணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். இவர்கள் வலுவான வீரர்கள்.

ஆனால், இந்த Top Order வீரர்கள் சில நேரங்களில் விரைவில் ஆட்டம் இழந்து, ஓட்டங்கள் எடுக்க முடியாமல் போகும் போது அடுத்தடுத்து களமிறங்கும் வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படும்.

இது அணிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறும். இதனால் நடுவரிசையை பலப்படுத்துவது அவசியம். 4வது வீரர் வரிசைக்கு ராகுல் தான் பொருத்தமானவர். அவரை கண்டிப்பாக இந்த வரிசையில் களம் இறக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நானாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு ராகுலை 4வது இடத்தில் Bat செய்யுங்கள் என்று கூறிவிடுவேன். உங்களுக்கு 15 வாய்ப்புகள் தருகிறோம், விளையாடுங்கள் என்று கூறுவேன். மான்செஸ்டர் போட்டியில் சதம் விளாசிய ராகுலை, கடைசி ஒருநாள் போட்டியில் நீக்கியது ஏன் என்று தெரியவில்லை.

இதுபோன்ற சிறந்த வீரர்களை உங்களால் உருவாக்க முடியாது. 5வது வரிசையில் ரகானேவை பயன்படுத்தலாம். அதன் பின்னர், 6வது இடத்துக்கு தினேஷ் கார்த்திக் அல்லது டோனியா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

ரகானேவை ஒருநாள் தொடரில் இருந்து நீக்கியது வேதனை அளித்தாலும், அவரின் சேவை டெஸ்ட் தொடருக்கு முக்கியம் என்பதை அணி நிர்வாகம் உணர்ந்து இருக்கிறது. இருவரையும் வேண்டுமென்றே அணி நிர்வாகம் ஒதுக்கிவிட்டது என்று நான் கூறவில்லை.

இந்திய அணியின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரராக வலம் வந்தவர் டோனி. ஆனால், தற்போது Batting-யில் திணறுகிறார். அவர் தனது திறமையை அதிகரித்து, இன்னும் 1 ஆண்டுக்கு அணியில் நீடிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்