டிராவில் முடிந்த இலங்கை-மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் போட்டி

Report Print Kabilan in கிரிக்கெட்

செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற இலங்கை-மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 226 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி செயிண்ட் லூசியாவில் 14ஆம் திகதி தொடங்கியது.

முதலில் ஆடிய இலங்கை அணி 253 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் அணித்தலைவர் சண்டிமால் 119 ஓட்டங்களும், குசால் மெண்டிஸ் 45 ஓட்டங்களும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியில் கேப்ரியல் 5 விக்கெட்டுகளும், கேமர் ரோச் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

AFP

பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 300 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஸ்மித் 61 ஓட்டங்களும், டவ்ரிச் 55 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகளும், கசுன் ரஜிதா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

AFP

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சில் துடுப்பாட்டம் செய்த இலங்கை அணி 342 ஓட்டங்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. குசால் மெண்டிஸ் 87 ஓட்டங்களும், டிக்வெல்ல 62 ஓட்டங்களும் எடுத்தனர். கேப்ரியல் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

CWI Media

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 296 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாட்டம் செய்த மேற்கிந்திய தீவுகள் அணியில் ஸ்மித், பவுல் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் கைகோர்த்த பிராத்வெயிட், ஷாய் ஹோப் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹோப் 39 ஓட்டங்களில் லக்மல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரோஸ்டனையும் 13 ஓட்டங்களில் லக்மல் அவுட் ஆக்கினார்.

Getty Image

அதன் பின்னர் அணித்தலைவர் ஹோல்டர் களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே மழை குறுக்கிட்டது. அதனைத் தொடர்ந்து, வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அச்சமயம் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அந்த அணி தரப்பில் பிராத்வெயிட் 59 ஓட்டங்களுடனும், ஹோல்டர் 15 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 13 விக்கெட்டுகளை வீழ்த்திய, மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கேப்ரியல் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்