பிரித்து மேய்ந்த தினேஷ் கார்த்திக்: மண்ணைக் கவ்விய ராஜஸ்தான்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
414Shares
414Shares
ibctamil.com

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சு தெரிவு செய்தார்.

அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராகுல் திரிபாதி, ஜாஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஷிவம் மவி வீசினார். ராகுல் திரிபாதி எதிர்கொண்டார். திரிபாதி அடித்த பந்து ஸ்லிப் திசையை நோக்கி சென்றது.

ஆனால் ராணா பந்தை பிடிக்க தவறினார். இதனால் டக்அவுட்டில் இருந்து ராணா தப்பினார். 2-வது ஓவரை பிரசித் வீசினார். இந்த ஓவரில் ராகுல் திரிபாதி ஒரு சிக்ஸ், ஹாட்ரிக் பவுண்டரி வீசினார்.

இதனால் 19 ஓட்டங்கள் சேர்த்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 3-வது ஓவரை ஷிவம் வீசினார். இந்த ஓவரில் பட்லர் இரண்டு சிக்ஸ், 3 பவுண்டரி விளாசினார்.

இதனால் ராஜஸ்தானுக்கு 28 ஓட்டங்கள் கிடைத்தது. இதனால் 3 ஓவரில் 49 ஓட்டங்கள் குவித்தது. 3.2 ஓவரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் 50 ஓட்டங்களைத் தொட்டது.

5-வது ஓவரை ரஸல் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் ராகுல் திரிபாதி 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 4.5 ஓவரில் 63 ஓட்டங்கள் குவித்திருந்தது. 8-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் இருந்து ராஜஸ்தானுக்கு சரிவு ஏற்பட்டது.

இந்த ஓவரில் ரகானே ஆட்டமிழந்தார். 10-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பட்லர் ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 39 ஓட்டங்கள் சேர்த்தார்.

பட்லர் ஆட்டமிழந்ததும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிய ஆரம்பித்தது. சுனில் நரைன் சுஞ்சு சாம்சனை வீழ்த்த, குல்தீப் யாதவ் பென்ஸ் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரையும் வெளியேற்றினார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட் தாக்குப்பிடித்து விளையாடி 26 ஓட்டங்கள் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவரில் 142 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 143 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவரில் 20 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

143 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது கொல்கத்தா அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேன், கிறிஸ் லைன் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக ஓட்டங்கள் குவித்தனர். முதல் ஓவரை கவுதம் வீசினார். அந்த ஓவரில் நரேன் 2 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 21 ஓட்டங்கள் எடுத்தார்.

2-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் நரேன் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராபின் உத்தப்பா 4 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் வீசிய 4-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் நிதிஷ் ராணா களமிறங்கினார். லைன், ராணா இருவரும் நிதானமாக விளையாடினர். இதனால் ஆறு ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 51 ஓட்டங்கள் எடுத்தது.

9-வது ஓவரை இஷ் சோடி வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் நிதிஷ் ராணா எல்.பி.டபுல்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

அவர் 17 பந்தில் 21 ஓட்டங்கள் எடுத்தார். தொடர்ந்து அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். 10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 80 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

15 ஓவர்களில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்கள் எடுத்தது. 16-வது ஓவரை ஸ்டோக்ஸ் வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தில் லைன் ஆட்டமிழந்தார்.

அவர் 42 பந்தில் 45 ஓட்டங்கள் எடுத்தார். அதன்பின் ஆண்ட்ரே ரசல் களமிறங்கினார். தினேஷ் கார்த்திக், ரசல் ஆகியோர் இணைந்து பொறுப்புடன் விளையாடினர்.

இறுதியில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெற செய்தார். அவர் 41 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்