இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் முரளிதரன் பிறந்த தினம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன், இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையைக் கொண்டவர், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்.

துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர், 1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே திகதியில் பிறந்தார்.

1990களில் இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில், 38 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், 1992ஆம் ஆண்டு இலங்கை டெஸ்ட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக முத்தையா முரளிதரன் களமிறங்கினார். தனது மாயாஜால சுழற்பந்து வீச்சின் மூலம் எதிரணி துடுப்பாட்ட வீரர்களை திக்குமுக்காட செய்த முரளிதரன், இலங்கை அணிக்கு வெற்றிகளை தேடித் தந்தார்.

முதல் மூன்று ஆண்டுகளிலேயே, தான் விளையாடிய 23 டெஸ்ட் போட்டிகளில் 81 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் முரளிதரன். 1993ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும் களம் கண்ட முரளிதரன், அதிலும் தனது திறமையை நிரூபித்தார்.

எனினும், தனது 18 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளையும் அவர் சந்தித்தார். அதில் முக்கியமாக, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இவரின் பந்து வீச்சுக்கு நடுவர் 'No Ball' வழங்கினார்.

மேலும், இவரின் பந்துவீச்சு சர்ச்சையான முறையில் இல்லை என எதிரணியினர் தொடர்ந்து புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஐ.சி.சி-யினால் பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

எனினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனையை படைத்துள்ளார். அத்துடன் ஒருநாள் போட்டியிலும் 500 விக்கெட்டுகள் என்ற வரலாற்றுச் சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் இவரின் பங்கு மிகப் பெரியது. ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை விளையாடி உள்ள முரளிதரன், 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இலங்கை டெஸ்ட் அணிக்கு தலைவராக 54 போட்டிகளிலும், ஒருநாள் அணிக்கு தலைவராக 70 போட்டிகளிலும் முரளிதரன் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers