கடைசி ஓவரில் டெல்லி ரசிகர்களை ஆத்திரப்படுத்திய ராய்: மூன்றாவது தோல்வியை சந்தித்த மும்பை

Report Print Santhan in கிரிக்கெட்
511Shares
511Shares
lankasrimarket.com

மும்பை அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்ற டெல்லி டேர்டேவில்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன் படி மும்பை அணிக்கு துவக்க வீரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை கொடுத்த இந்த ஜோடி 100 ஓட்டங்களை கடந்தது.

லெவிஸ் 48 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவும் 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 23 பந்தில் 44 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் சொபிக்க தவறினர்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்கள் எடுத்தது.

டெல்லி அணியின் பந்துவீச்சில் டேனியல் கிறிஸ்டியன், ராகுல் தெவாட்டியா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.

195 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு துவக்க வீரர்களாக ஜேசன் ராய்- கவுதம் காம்பீர் களமிறங்கினர்.

காம்பீர் 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, அடுத்து வந்த ரிசப் பாண்ட் ராயுடன் இணைந்து வானவேடிக்கை காட்டினார்.

இவர் ஒரு புறம் வான வேடிக்கை காட்ட, ராய் ஒரு புறம் வானவேடிக்கை காட்ட என பந்து நாலா புறமும் சிதறின.

சிறப்பாக இந்த பார்ட்னர்ஷிப் சென்று கொண்டிருந்த போது அணியின் எண்ணிக்கை 119 இருந்த நிலையில் பாண்ட் 47 ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த அதிரடி வீரர் மெக்ஸ்வேல் 13 ஓட்டங்களில் வெளியேற ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

ஆனால் தனி ஒருவனாக ராய் அதிரடி காட்டியதால் அணியின் எண்ணிக்கை சீரான விகிதத்தில் எகிறியது. இதனால் டெல்லி அணியின் வெற்றிக்கு கடை ஓவரில் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை எதிர் கொண்ட ராய் அந்த ஓவரில் முதலிரண்டு பந்தில் பவுண்டரி, சிக்ஸர் அடித்தார். இன்னும் 4 பந்துகளுக்கு ஓரு ஓட்டம் தான் அசால்ட்டாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற போது, அடுத்து வந்த மூன்று பந்துகளை ராய் வீணடித்ததால், டெல்லி ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.

கடைசி ஒரு பந்துக்கு ஒரு ஓட்டம் என்ற போது, ராய் ஒரு ஓட்டம் அடித்து 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி மூன்றாவது தோல்வியை பதிவு செய்துள்ளது.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்