டி வில்லியர்ஸ் பொறுப்பான ஆட்டம்: பஞ்சாபை வெளுத்து வாங்கிய பெங்களூரு

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டியில் டி வில்லியர்சின் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது

இதில் 3 ஓவர்களில் 32/0 என்று கிங்ஸ் லெவன் அதிரடி காட்டிக் கொண்டிருந்தது. அப்போது தன் 2வது ஓவரை வீசினார் உமேஷ் யாதவ்.

இன்னிங்சின் 4வது ஓவர் முதலில் மயங்க் அகர்வால் (15) உமேஷ் யாதவ் பந்தை டிரைவ் ஆடச் செல்ல பந்து மட்டையின் விளிம்பில் பட்டு டி காக்கிற்கு வலது புறம் செல்ல டைவ் அடித்து அற்புதமான கேட்சைப் பிடித்தார்.

அடுத்த பந்தே அவுஸ்திரேலிய அதிரடி வீர்ர் ஏரோன் பிஞ்ச் இன்ஸ்விங்கரை கால் காப்பில் வாங்க நடுவர் கையை உயர்த்தினார், ஆனால் பிஞ்ச் அதனை ரிவியூ செய்தார். நடுவர் தீர்ப்பு இறுதி செய்யப்பட்டது, பிஞ்ச் டக் அவுட் ஆனார்.

யுவராஜ் சிங் இறங்கி ஹாட்ரிக் வாய்ப்பைத் தடுத்தார். 4வது பந்தையும் யுவராஜ் தடுத்தாடினார்.

அடுத்த பந்து மார்புயர ஷார்ட் பிட்ச் பந்து புல் ஆடினார், சரியாகச் சிக்கவில்லை, பீல்டர் பவுண்டரியில் நின்றிருந்தால் கேட்ச் ஆகியிருக்கும் ஆனால் அவர் முன்னே வந்ததால் பந்து பின்னால் சென்று பவுண்டரி ஆனது.

மீண்டும் ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு பந்தை வேகமாக வீச வேகத்துக்கு ஈடுகொடுக்காமல் யுவராஜ் சிங் பவுல்டு ஆனார். மிடில் ஸ்டம்ப் பெயர்ந்தது. உமேஷ் இந்த விக்கெட்டை கொஞ்சம் ஆக்ரோஷமாகக் கொண்டாடினார்.

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள். 32/0 என்று தொடங்கிய கிங்ஸ் லெவன் 36/3 என்று சரிந்தது.

தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி 19.2 ஓவர் முடிவில் 155 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக ராகுல் 47 ஓட்டங்களும் அணித்தலைவர் அஷ்வின் 33 ஓட்டங்களும் குவித்தனர்.

பெங்களூரு அணியின் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.கிரிஸ் வோக்ஸ்,கெஜ்ரோலியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து, 156 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், மெக்கல்லம் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே மெக்கல்லம் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய அணித்தலைவர் விராட் கோஹ்லி 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டி வில்லியர்ஸ் களமிறங்கினார்.

பொறுப்புடன் ஆடிய டி காக் 34 பந்துகளில் ஒரு சிக்சர், 7 பவுண்டரியுடன் 45 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து இறங்கிய சர்பிராஸ்கான் டக் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட்டுக்கு 87 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அவரை தொடர்ந்து மந்தீப் சிங் களமிறங்கினார். அவர் டி வில்லியர்சுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடி மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

அதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ் 40 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 57 ஓட்டங்களும், மந்தீப் சிங் 22 ஓட்டங்களும் எடுத்து அவுட்டாகினர்.

இறுதியில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்ககள் எடுத்து வெற்றி பெற்றது. கிரிஸ் வோக்ஸ் ஒரு ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 9 ஓட்டங்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

பஞ்சாப் அணி சார்பில் அஷ்வின் 2 விக்கெட்டும், அக்சர் படேல், முஜிபுர் ரகுமான், ஆண்ட்ரு டை ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்