சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் ஏப்ரல் 10-ம் திகதி திட்டமிட்டபடி ஐ.பி.எல் போட்டி நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஏப்ரல் 10ம் திகதி மத்திய மாநில அரசுகளை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த திட்டமிட்டிருந்தார்.
மேலும் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியை நடத்தினால் வீரர்களை சிறை பிடிப்போம் என சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அன்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சி.எஸ்.கே அணி களம் காணுகிறது.
இரவு 8 மணிக்கு சென்னை மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பு மேலாளர் பாபா வெளியிட்டுள்ளார்.