வாய்ப்புகளை வீணடித்ததே தோல்விக்கு காரணம்: விராட் கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்க அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், நல்ல வாய்ப்புகளை வீணடித்ததால் தோல்வியுற்றதாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன.

இந்நிலையில் ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.

50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்கள் குவித்தது, அதிகபட்சமாக ஷிகர் தவான் 100 ஓட்டங்களும், விராட் கோஹ்லி 75 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு, கனமழை காரணமாக D/L விதிப்படி 28 ஓவரில் 202 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன் பின்னர், அதிரடியாக ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, 25.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ஹெய்ன்ரிச் கிளாசன் 43 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 39 ஓட்டங்களும் எடுத்தனர். இந்நிலையில், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், ‘மழைக்குப் பின்னர் தொடர்ந்த ஆட்டம், ஒரு டி20 போட்டியாகவே அமைந்துவிட்டது.

இதனால், இலக்கை துரத்துவது அவர்களுக்கு எளிதாகிவிட்டது. அதோடு சில அருமையான வாய்ப்புகளை நாங்கள் வீணடித்துவிட்டோம். அதுவே தோல்விக்கு காரணம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்