215 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி: தொடரை கைப்பற்றி அசத்தல்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை- வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 215 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டி கடந்த வியாழக்கிழமை டாக்காவில் தொடங்கிய நிலையில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 222 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 110 ஓட்டங்களில் சுருண்டது.

இதையடுத்து இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

இதில் அந்த அணி 226 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது, அந்த அணியின் ரோஷன் சில்வா அதிகபட்சமாக 70 ஓட்டங்கள் குவித்தார்.

இதன் பின்னர் 339 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

அந்த அணியின் வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற தொடங்கினார்.

மொமினுல் ஹக் அதிகபட்சமாக 33 ஓட்டங்கள் எடுக்க மூன்றாம் நாளான இன்று வங்கதேசம் 123 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது.

இலங்கை அணி சார்பில் ரங்கனா ஹெரத் 4 விக்கெட்களையும், அகில தனஞ்செய 5 விக்கெட்களையும் இரண்டாவது இன்னிங்சில் வீழ்த்தினார்கள்.

இதன் மூலம் இலங்கை அணி 215 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது.

தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை வீரர் ரோஷன் சில்வா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரண்டு விருதுகளையும் வென்று அசத்தியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்