ஐஸ் கிரிக்கெட்டில் தோல்வியை தழுவிய சேவாக் அணி

Report Print Kabilan in கிரிக்கெட்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஐஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சேவாக் தலைமையிலான பேலஸ் டையமண்ட்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

சுவிஸின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் செயிண்ட் மாரிட்ஸ் ஏரி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5910 அடி உயரத்தில் உள்ள இந்த ஏரியானது, ஓர் ஆண்டில் 6 மாதங்கள் வரை உறைந்த நிலையில் இருக்கும்.

அப்போது, இங்கு ஐஸ் ஹாக்கி, குதிரைப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும். இந்நிலையில் முதன் முறையாக ஐஸ் கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களைக் கொண்ட இரு அணிகள் தெரிவு செய்யப்பட்டது. அந்த அணிகள் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட முடிவானது.

இந்நிலையில் இத்தொடரின் முதல் ஆட்டம் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில், சேவாக் தலைமையிலான பேலஸ் டையமண்ட்ஸ் அணியும், அப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணியும் மோதின.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டையமண்ட்ஸ் அணி, துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அணித்தலைவர் வீரேந்திர சேவாக் தொடக்க வீரராக களம் கண்டார். அவர், 31 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 62 ஓட்டங்களை விளாசினார்.

ஆனால் தில்ஷன், ஜெயவர்தனே, மைக்கேல் ஹஸ்ஸி ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். எனினும், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 40 ஓட்டங்கள் சேர்த்தார்.

முகமது கைப் 19 ஓட்டங்களும், ஜோகிந்தர் சர்மா 18 ஓட்டங்களும் சேர்க்க டையமண்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.

ராயல்ஸ் அணி தரப்பில் அப்துல் ரசாக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராயல்ஸ் அணி, 15.2 ஓவர்களிலேயே இலக்கை அடைந்தது.

அந்த அணியில் ஓவைஸ் ஷா 74 ஓட்டங்கள் எடுத்தார். இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்