இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, சையத் முஷ்டாக் அலி டி20 கிண்ணப் போட்டியில், நான்காவது முறையாக சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இடக்கை துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமீபத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி டி20 கிண்ண தொடரில், உத்தர பிரதேச அணிக்காக ரெய்னா விளையாடி வருகிறார்.
கொல்கத்தாவில் நடந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற உத்தர பிரதேச அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
துவக்க ஆட்டக்காரர் சமர்த் சிங் ஆட்டமிழக்க, ரெய்னா களம் கண்டார். அதிரடியாக விளையாடிய ரெய்னா, 22 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார்.
அதன் பிறகு, தான் சந்தித்த 49வது பந்தில் சதமடித்தார். டி20 போட்டிகளில் இது அவரின் 4வது சதமாகும். தொடர்ந்து ஆடிய ரெய்னா, 59 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 126 ஒட்டங்கள் குவித்தார்.
உத்தர பிரதேச அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவரில் 3 விக்கெட் இழப்புக்கு 235 ஒட்டங்கள் எடுத்துள்ளது.
இதற்கு முன்பு டி20 உலகக் கிண்ணம், ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் என முக்கியமான 3 போட்டிகளிலும் சதமடித்துள்ள சுரேஷ் ரெய்னா, தற்போது சையத் முஷ்டாக் அலி போட்டியிலும் சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.