மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ, ஐபிஎல்-யில் டோனியின் தலைமையின் கீழ் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
வெய்ன் பிராவோ, ஐபிஎல்-யில் முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார்.
தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடைக்காலம் முடிந்து, இந்த ஆண்டு ஐபிஎல்-யில் விளையாட உள்ளது. இந்நிலையில், பிராவோ மீண்டும் சென்னை அணியில் விளையாட உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘CSK-வில் ஐந்து ஆண்டுகள் நான் ரசித்து விளையாடினேன். அது தான் ஐபிஎல்-யில் எனது சிறந்த காலகட்டமாகும். தற்போது நான் முன்பை விட, அதிக அளவு முதிர்ச்சியடைந்துள்ளேன்.
டோனி, விளையாட்டை புரிந்துகொள்வதற்கான வழிமுறை எனக்கு கற்றுத் தந்தார். குறிப்பாக, டி20 போட்டிகளை புரிந்துகொள்ள உதவினார்.
டோனியைப் போல ஒரு வீரர் அணியில் இடம் பெறுவது மிகவும் சிறந்தது. ஏனெனில், விளையாட்டின் போது ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதற்கான தன்மை அவரிடம் உள்ளது.
அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. நான் ஊதா நிற தொப்பியை அணிவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், அது தானகவே நிகழ்ந்தது. சவால்களை எதிர்கொள்வது மற்றும் அதிக பொறுப்புகளை சுமப்பது எனக்கு பிடிக்கும்.
அதுவும், CSK அணியுடன் விளையாடும் போது, மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும். என்னுடைய பந்து வீசும் திறன் மீதும், ஆட்டத்தை முடிக்கும் திறன் மீதும், டோனிக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
எனவே, அவரின் தலைமையின் கீழ் மீண்டும் விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.