வாழ்வா..சாவா போட்டியில் அசத்திய இலங்கை பந்து வீச்சாளர்கள்: கடைசி இடத்தை பிடித்தது

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

வங்கதேசம், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் கடந்த 17-ஆம் திகதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை தோல்வியை சந்தித்தது, அதைத் தொடர்ந்து 19-ஆம் திகதி வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது.

இதனால் இன்றைய போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேற்றப்படும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தால், இப்போட்டியில் இலங்கை வீரர்கள் ஆக்ரோசமாக விளையாடினர்.

இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், ஜிம்பாப்வே அணி 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

இலங்கை அணி சார்பில். பெரேரா 4 விக்கெட்டும், பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஜிம்பாப்வே அணி சார்பில் டெய்லர் 58 ஓட்டமும், கிரிமீயர் 34 ஓட்டங்களும் எடுத்தனர்.

எட்டக் கூடிய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக குசல் பெரேரா-தரங்கா களமிறங்கினர்.

தரங்கா 17 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த குசால் மெண்டிஸ், துவக்க வீரர் பெரேராவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார்.

இந்த ஜோடி சிறப்பாக ஆடி வந்ததால், அணியின் எண்ணிக்கையும் சீராக உயர்ந்தது. குசால் மெண்டிஸ் 36 ஓட்டங்களில் வெளியேறிய போது, இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

இலங்கை அணி வெற்றியை நோக்கிச் சென்ற நேரத்தில் அடுத்தத்து விக்கெட்டுக்களை இழக்க 34.4 ஓவரில் 145 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் 6-வது விக்கெட்டுக்கு சண்டிமல் உடன் திசாரா பெரேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 44.5 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது வரை வங்கதேசம் 2 போட்டியில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் மூன்று போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. ரன்ரேட் மூலம் ஜிம்பாப்வே 2-வது இடத்தில் உள்ளது. இலங்கை கடைசி இடத்தில் உள்ளது.

இரண்டு அணிகளுக்கும் வங்கதேச அணியுடன் ஒரு ஆட்டம் உள்ளதால், அப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்