தென்னாபிரிக்காவில் இந்தியாவின் திட்டங்கள்!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

எதிர்வரும் டிசம்பர் 27 ஆம் திகதி இந்திய அணி தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

அந்தவகையில் டெஸ்ட் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக எதிர்வரும் 30, 31 ஆம் திகதிகளில் கிரிக்கெட் தென்னாபிரிக்க லெவன் அணிக்கெதிராக நடைபெறவுள்ள இரண்டு நாள் பயிற்சியாட்டத்தில் விளையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் சில தினங்களுக்கு முன்னர் இந்தப்பயிற்சி ஆட்டத்தை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ரத்து செய்துள்ளது.

இங்கிலாந்துக்கு 2014 ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட இந்தியா டெஸ்ட் தொடரில் 3 : 1 என்று தோல்வி அடைந்ததற்குப் பயிற்சி ஆட்டங்களில் விளையாடாததும் ஒரு காரணமாகக் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து எதிர்காலத்தில் இந்திய அணியின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின் போது பயிற்சி ஆட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்தன.

வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான தென்னாபிரிக்க ஆடுகளங்களில் போதிய பரிச்சியமில்லாத இந்திய அணி பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்து நேரடியாக டெஸ்ட் போட்டியில் களமிறங்குவது விபரீத முடிவாகவே கிரிக்கெட் அவதானிகளால் நோக்கப்பட்டது.

ஆனாலும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அதற்கு மாற்றாக ஒரு முயற்சியில் இறங்கி வெற்றியும் கண்டுள்ளது. அதுதான் தென்னாபிரிக்காவில் உள்ள வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான மைதானம் ஒன்றை வாடகைக்குப் பெற்று அதில் 5 அல்லது 6 நாட்கள் பயிற்சி பெறுவதற்கு உத்தேசித்துள்ளது.

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் இந்த உத்தியையே இந்தியா கையாண்டிருந்தது. ஆனாலும் தென்னாபிரிக்க காலநிலைக்கேற்ப வீரர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்வதற்கு அங்குள்ள மைதானங்களில் பயிற்சி மேற்கொள்வதே சிறந்த பலனைத் தரும் என்பதானாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெறாத வேகப்பந்து வீச்சாளர்களான பசில் தம்பி, முகமட் சிராஜ், ஆவேஸ்கான், அங்கித் ராஜ்புட் ஆகிய வீரர்களைப் பயிற்சியின் போது பந்துவீசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என கிரிக்கெட் தென்னாபிரிக்காவிடம் கோரிக்கை விடுத்து சாதகமான பதிலையும் பெற்றுள்ளது.

என்னதான் இந்திய வீரர்கள் சிறப்பான முறையில் பயிற்சியின் பொழுது பந்துவீசினாலும் தென்னாபிரிக்க வீரர்களுக்கு வாலாயமான மைதானத்தில் அவர்கள் இரண்டாந்தரப் பந்துவீச்சாளர்களாக இருந்தாலும் அவர்களது பந்துவீச்சைப் பயிற்சி ஆட்டத்தில் எதிர்கொள்வது போல் வருமா என்ற சந்தேகம் ஏற்படவே செய்கின்றது.

ஆனாலும் இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு தென்னாபிரிக்கத் தொடருக்காக இந்தியா தன்னைத் தயார்ப்படுத்தி வரும் நிலையில் அதற்கான பலன் அவர்களுக்குக் கிடைத்தால் அது இந்தியாவுக்கு மட்டுமல்ல ஆசியநாடுகளுக்கே பெருமையாக இருக்கும் எனலாம்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 2018 ஜனவரி 05 ஆம் திகதி கேப்டவுனில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்