மேத்யூ ஹைடனின் சாதனையை சமன் செய்த இங்கிலாந்து வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் விளையாடும் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் அலைஸ்டர் குக் சதம் அடித்தார்.

இதன்மூலம், தொடக்க ஆட்டக்காரராக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

மெல்போனில் நடந்து வரும் 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பாட்டத்தை துவங்கிய அவுஸ்திரேலியா முதல்நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 244 ஒட்டங்கள் எடுத்திருந்தது.

தொடக்க வீரர் டேவிட் வார்னர் 103 ஒட்டங்கள் குவித்தார். மேலும் ஸ்மித் 65 மற்றும் ஷான் மார்ஷ் 31 ஒட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை அவுஸ்திரேலிய அணி தொடங்கியது. ஸ்மித் 76 ஒட்டங்களில் அவுட் ஆக, மார்ஷ் 61 ஒட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், அவுஸ்திரேலியா 327 ஒட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில், பிராட் 4 விக்கெட்டும், ஆண்டர்சன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில், மார்க் ஸ்டோன்மேன் 15 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜேம்ஸ் வின்ஸும் 17 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் அதன் பின்னர் களமிறங்கிய ஜோ ரூட், அலைஸ்டர் குக்குடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய குக், தனது 32வது சதத்தை பதிவு செய்தார்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 192 ஒட்டங்கள் எடுத்துள்ளது. அவுஸ்திரேலிய அணியை விட 135 ஒட்டங்கள் இங்கிலாந்து பின் தங்கியுள்ளது.

குக்கின் இந்த சதத்தின் மூலமாக, சர்வதேச டெஸ்ட் அரங்கில், தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில், அவுஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடனுடன் அவர் இணைந்துள்ளார்.

முதல் இடத்தில், இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் 33 சதங்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்