இலங்கை- இந்தியா மோதிய முதல் டெஸ்ட்: ஆட்டம் டிரா ஆனது

Report Print Santhan in கிரிக்கெட்
565Shares
565Shares
ibctamil.com

கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கை- இந்தியா மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 172 ஓட்டங்களும், இலங்கை 294 ஓட்டங்களும் எடுத்தது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான அடித்தளம் கொடுத்தனர்.

அணியின் துவக்க வீரர்களான கே.எல்.ராகுல் 79 ஓட்டங்களும், மற்றொரு துவக்க வீரரான தவான் 94 ஓட்டங்களும் குவித்து வெளியேறினர்.

அடுத்து வந்த புஜாரா 22 ஓட்டங்களும், ரகானே டக் அவுட் ஆகியும், ஜடேஜா(9), அஸ்வின்(7) என அடுத்தடுத்து வெளியேறினர்.

விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும், அணியின் தலைவரான விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனால் சதம் அடித்த அவர் 104 ஓட்டங்களில் வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் பவுலியன் திரும்ப, இந்திய அணி, இறுதியாக 8 விக்கெட் இழப்பிற்கு 352 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ராகுல் 79 ஓட்டங்களும், தவான் 94 ஓட்டங்களும், கோஹ்லி 104 ஓட்டங்களும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் அசத்திய சுரங்கா லக்மல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 231 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர் கருணாரத்னே 6 ஓட்டங்களிலும், சமரவிக்ரமா ஓட்டம் எதுவும் எடுக்காமலும் வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.

சற்று முன் வரை இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 2 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது, தேநீர் இடைவேளைக்கு பின்னர் 7 ஓட்டங்கள் எடுத்த திரிமன்னே ஆட்டமிழந்தார், அடுத்ததாக சண்டிமால், திக்வெல்ல இணைந்தனர்.

இருவரும் இணைந்து 47 ஓட்டங்கள் சேர்த்தனர், ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டிய நிலையில் இலங்கை அணி 26.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 75 ஓட்டங்கள் எடுத்திருந்த போது முடித்துக் கொள்ளப்பட்டது.

இதனால் இப்போட்டி டிராவில் முடிவடைந்தது, இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 8 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்குமாருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்