இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி அங்கு ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டி ஹாபன்டோடவில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. துவக்க வீரர்களாக டிக்வெல்லா மற்றும் குணதிலகா களமிறங்கினர்.

ஆரம்பத்தில் இருந்தே இருவரும் ஜிம்பாப்வே அணி வீரர்களின் பந்து வீச்சை எளிதாக சமாளித்தனர். இதனால் இலங்கை அணியின் ரன் விகிதமும் சீரான வேகத்தில் உயர்ந்தது.

இந்த ஜோடியை பிரிப்பதற்கு ஜிம்பாப்வே அணி வீரர்கள் தொடர்ந்து பந்து வீச்சை மாற்றிய போதும் எந்த ஒரு பயனும் அளிக்கவில்லை. அரைசதம் கடந்த டிக்வெல்லா சதம் அடித்து 116-ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இவருக்கு இணையாக ஆடிய குணதிலகா 87-ஓட்டங்கள் எடுத்திருந்த போது, வாலர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.இந்த இணை ஜோடி முதல் விக்கெட்டிற்கு 209-ஓட்டங்கள் குவித்தது.

அடுத்து வந்த அணியின் தலைவர் மேத்யூஸ் அதிரடி காட்ட 40-பந்துகளில் 42-ஓட்டங்கள் குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய உபுல் தரங்கா 20-பந்தில் 22-ஓட்டங்கள் குவித்தார்.

இவர்களைத் தொடர்ந்து பின் வரிசை வீர்ர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி இறுதியாக 50-ஓவர் முடிவில் 6-விக்கெட் இழப்பிற்கு 300-ஓட்டங்கள் குவித்தது.

ஜிம்பாப்வே அணி சார்பில் கிறிஸ் மோபு மற்றும் மால்கோம் வாலர் தலா 2-விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதன் பின்னர் 301-ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால், போட்டி 31-ஓவர்களாக குறைக்கப்பட்டு 219-ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஜிம்பாப்வே அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

துவக்க வீரர்களான மசகட்சா மற்றும் சாலமன் மிர் ஆரம்பத்திலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இத்தொடரில் சதம் அடித்து இலங்கை அணியை மிரட்டிய மிர் இப்போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மசகட்சா 28-ஓட்டங்களிலும், மிர் 30-பந்துகளில் 43-ஓட்டங்களும் குவித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அடுத்து வந்த முசகண்டா, எர்வின்னுடன் ஜோடி சேர ஜிம்பாப்வே அணி வெற்றியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

எர்வின் இலங்கை வீரர்களின் பந்து வீச்சை எளிதாக சமாளித்தார். முசகண்டா 30-ஓட்டங்களில் ஆட்டமிழக்க. எர்வின் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார். பின் வரிசை வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பினாலும், ஒன் மேன் ஆர்மியாக எர்வின் அதிரடி காட்ட ஆரம்பித்தார்.

இதனால் ஜிம்பாப்வே அணி இறுதியாக 29.2-ஓவரில் 6-விக்கெட் இழப்பிற்கு 219-ஓட்டங்கள் குவித்து இத்தொடரின் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு அணிகளும் 2-2 என்று சமநிலையில் உள்ளன.

இலங்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா 4-ஓவர் வீசி 18-ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் ரசிகர்களை ஏமாற்றினார்.மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments