இந்த ஐபிஎல்-லில் உங்கள் அபிமான அணி எது? அந்த அணியின் பலம் பலவீனம் பற்றி தெரியுமா?

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளின் 10வது சீசன் ஐதராபாத்தில் இன்று தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் இதில் இடம்பெறும் அணிகளில் பலம் மற்றும் பலவீனம் குறித்த ஒரு பார்வை..

மும்பை இந்தியன்ஸ்

பலம்: ரோஹித் சர்மா, லெண்டல் சிம்மன்ஸ், கீயரன் போல்லார்ட் போன்றவர்களின் அதிரடி ஆட்டம். டி-20 கிரிக்கெட்டில் அனுபவசாலிகளான லசித் மலிங்கா, மிட்சல் ஜான்சன் போன்ற பந்துவீச்சாளர்கள். இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மஹேலா ஜெயவர்தனே அணியின் பயிற்சியாளராக நியமனம்.

பலவீனம்: ஐபில் தொடரில் கடந்த மூன்று ஆண்டுகளாக தடுமாற்றத்துடனே தொடங்கியுள்ளனர். பந்து வீச்சாளர் டிம் சவுத்தி, பேட்ஸ்மென் ஜாஸ் பட்லர் காயம் காரணமாக தொடரின் ஆரம்ப ஆட்டங்களில் பங்குபெறுவது சந்தேகம்.

டெல்லி டேர்டெவில்ஸ்

பலம்: கோரி ஆண்டர்ஸன், முகமது ஷமி போன்ற அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள். ஏஞ்சலோ மாத்யூஸ் போன்ற சகதுறை ஆட்டக்காரர்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் அமித் மிஸ்ரா, எம். அஸ்வின் அணிக்கு கூடுதல் பலம்.

பலவீனம்: அணிக்கு வெற்றியை தேடித் தரக்கூடிய நட்சத்திர பேட்ஸ்மேன் யாருமில்லை. 38 வயதாகும் ஜாகீர் கான் அணியை திறம்பட வழி நடத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்

பலம்: கிரிஸ் கேய்ல், டி வில்லியர்ஸ், கேதர் ஜாதவ் ஆகியோரின் அதிரடி ஆட்டம். பொறுப்பு அணித்தலைவர் ஷேன் வாட்சன் தலைமையில் புதிய வேகத்துடன் களமிறங்குவது.

பலவீனம்: அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு காயம் காரணமாக ஆரம்ப ஆட்டங்களில் இடம்பெற போவதில்லை. பந்துவீச்சு பிரிவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதுவரை கிண்ணத்தை ஒருமுறை கூட வெல்லாத அணி.

சன்ரைஸர்ஸ் ஐதராபாத்

பலம்: அணித்தலைவர் டேவிட் வார்னர் பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம். ஐபில் தொடரில் ஷிகர் தவான், யுவ்ராஜ் சிங்கின் அனுபவம் அணியின் பலம். 2016 ஐபிஎல் கிண்ணத்தை வென்ற அணி

பலவீனம்: நம்பிக்கை வாய்ந்த நடுத் தர ஆட்டக்காரர்கள் இல்லை. அணித்தலைவர் டேவிட் வார்னரை மட்டுமே நம்பி இருப்பது. நல்ல சகலத்துறை ஆட்டக்காரர்கள் எவரும் அணியில் இடம்பெறவில்லை.

குஜராத் லைன்ஸ்

பலம்: பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித், சுரேஷ் ரெயினா போன்றவர்கள் அணியின் பலம். ஜடேஜா, ப்ராவோ போன்ற சகதுறை ஆட்டக்காரர்கள் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவர்கள்.

பலவீனம்: சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லாததால் அணியின் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை. அனுபவம் வாய்ந்த மத்திய தர ஆட்டக்காரர்கள் இல்லை.

ரைஸிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ்

பலம்: ஐசிசியின் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் அணியின் மிகப்பெரிய பலம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அணித்தலைவர் ஸ்டிவ் ஸ்மித், ரஹானே, பென் ஸ்டொக்ஸ் மற்றும் முன்னாள் இந்திய அணித்தலைவர் டோனி அணியின் பலம்.

பலவீனம்: அஸ்வினை தவிர திறமை வாய்ந்த பந்துவீச்சாளர் அணியில் யாரும் இல்லை. டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ப சகதுறை ஆட்டக்காரர்கள் இல்லை.

கிங்ஸ் 11 பஞ்சாப்

பலம்: ஷான் மார்ஷ், மார்டின் குப்டில், ஹாஷிம் ஆம்லா, ஈயன் மார்கன் போன்ற வீரர்கள் அணிக்கு பலம். இரண்டு முறை டி20 உலக கிண்ணம் வாங்கிய மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவர் டாரன் சாமி அணிக்கு கூடுதல் பலம்.

பலவீனம்: காயம் காரணமாக முரளி விஜய் அணியில் இடம்பெறவில்லை. சென்ற முறை தொடரில் மோசமாக விளையாடிய கடைசி இடத்தை பிடித்த அதே அணி திரும்பவும் களம் இறங்குகிறது. திறமை வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை.

கோல்கத்தா நைட் ரைடர்ஸ்

பலம்: 2016 ஐபிஎல்-லை போல் அணியின் பலமான உமேஷ் யாதவ் போன்ற பந்துவீச்சாளர்கள். புதிதாக சேர்ந்திருக்கும் ட்ரேண்ட் போல்ட் மேலும் பந்துவீச்சில் பலம் சேர்ப்பார். கவுதம் கம்பீர் போன்ற நம்பிக்கை வாய்ந்த பேட்ஸ்மென்.

பலவீனம்: அதிரடி ஆட்டத்துக்கு யூஸஃப் பதான் மட்டுமே நம்பியிருப்பது. அனுபவம் வாய்ந்த நடுத் தர ஆட்டக்காரர்கள் இல்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments