இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முரளிதரனை எப்படி பிரிக்க முடியாதோ, அதே போன்று தான் சனத் ஜெயசூர்யாவும்.
முரளிதரனும், ஜெயசூர்யாவும் இலங்கை அணிக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தந்துள்ளனர்.
சமீபத்தில் தான் முரளிதரன் கிரிக்கெட் உலகிற்கு எப்படி வந்தார். அவர் கடந்து வந்த பாதைகள் என்ன என்பது பற்றி பார்த்தோம்.
இவரைப்பற்றிய சின்ன ரீகேப் பார்ப்போமா...
சனத்ஜெயசூர்யா 1969 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30- ஆம் திகதி இலங்கையில் உள்ள Matara பகுதியில் பிறந்தார். இவர் பெற்றோரின் பெயர் டன்ஸ்டன் மற்றும் பிரீடா ஜெயசூர்யா.
ஜெயசூர்யாவுக்கு சந்தான ஜெயசூர்யா என்ற சகோதரர் உள்ளார். தன்னுடைய பள்ளிப்படிப்பை Matara வில் தொடங்கியுள்ளார். அதன் பின்னர் கிரிக்கெட்டின் மீது ஆர்வம் கொண்டு தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை தொடங்கியுள்ளார்.
1989-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் திகதி தன்னுடைய 20 வயதில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு காலடி எடுத்து வைக்கிறார் ஜெயசூர்யா.
அப்போட்டியில் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கிறார். இலங்கை அணி 30 ஓட்டங்களினால் தோற்றுப்போகிறது. அப்போது, யாரும் நினைக்கவில்லை சனத் கிரிக்கட்டின் பலதுறைகளிலும் சாதனைகளை படைக்கப்போகிறார் என்று.
அதன் பின்னர் இலங்கை அணிக்கு துவக்க வீரராக களமிறங்கி தன்னிச்சையாக போராடி பல வெற்றிகளைத் தேடித்தந்துள்ளார்.
இவர்கள் இருவரிலும், ஒருநாள் ஆட்டங்களில் மேட்ச் வின்னர் என்ற சொல்லுக்கு சச்சினைவிட, சனத்தே பொருத்தமானவர். ஓட்டங்கள்- விக்கெட்டுக்கள் என பன்முக ஆட்டக்காரராக வலம் வந்தவர்.
இப்படி, இலங்கை அணியினை பல தருணங்களில் தனியொரு வீரராக தோளில் சுமந்து வெற்றிகளைத் தேடி தந்துள்ளார் ஜெயசூர்யா.
ஒரு கட்டத்தில் டெஸ்ட் ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பின்பும், மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் வந்து ஆடினார்.
அதன் பின்னர் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சச்சின் தலைமை அணியிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி தனக்கு வயது தான் ஆனதே தவிற, தன்னுடைய அதிரடி இன்றளவும் குறையவில்லை என்று அந்த தொடரில் அதிரடி காட்டி, இந்திய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
கிரிக்கெட் மட்டுமின்றி அரசியலிலும் வெற்றி கண்டவர் ஜெயசூர்யா. இலங்கையின் மாத்தறை மாவட்டத்திலிருந்து அதிக விருப்பு வாக்குகள் பெற்ற அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.
இலங்கையில் மட்டுமல்ல கிரிக்கெட் விளையாடப்படும் அனைத்து நாடுகளிலும் ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டத்தினை பின்பற்றுபவர்கள் பலர் இருக்கின்றனர்.