வங்கதேச பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் டாக்கா அணி சிறப்பான ஓட்டங்களை குவித்தும் தோல்வியடைந்துள்ளது.
வங்கதேச பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த போட்டியில் டாக்கா டைனமிட்ஸ்- ராஜ்ஷாகி கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய டாக்கா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 182 ஓட்டங்கள் சேர்த்தது.
குமார் சங்கக்காரா 46 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 66 ஓட்டங்கள் சேர்த்தார்.
தவிர, மெஹடி மரூஃப் 25 பந்தில் 35 ஓட்டங்களும், சிக்குக் பிரசன்னா 16 பந்தில் 34 ஓட்டங்களும் சேர்த்தனர்.
இதைத் தொடர்ந்து 183 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என களமிறங்கியது ராஜ்ஷாகி கிங்ஸ் அணி.
தொடக்க வீரர் மொனினல் (56) நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். அதன் பின்னர் வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் இருந்த சமிட் படேல் டாக்கா அணியின் பந்தை நாலாபுறமும் சிதறடித்தார்.
இந்நிலையில் பரபரப்பான இந்த ஆட்டத்தில் ராஜ்ஷாகி கிங்ஸ் 19.5வது ஓவரில் 7 விக்கெட் இழந்து 184 ஓட்டங்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.
சமிட் படேல் 39 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்கள் என மொத்தம் 75 ஓட்டங்கள் குவித்தார். இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.