ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியுடன் ஜிம்பாப்வே அணி பலப்பரிட்சை நடத்தவுள்ளது.
இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே நாட்டில் கடந்த 14ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.
இதுவரை நடைபெற்ற ஆட்டங்களின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. 5 புள்ளிகளுடன் இலங்கை அணி இரண்டாம் இடமும், 2 புள்ளிகளுடன் ஜிம்பாப்வே கடைசி இடத்திலும் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போன போட்டி டிரா ஆனதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்துள்ளது.
இன்னும் ஒரு வெற்றி கூட பெறாத ஜிம்பாப்வே அணிக்கு இன்றைய இலங்கைக்கு எதிரான ஆட்டம் வாழ்வா? சாவா? ஆட்டமாகும்.
இலங்கை அணியை பெறுத்தவரை நுவன் குலசேகரா மற்றும் சுராங்கா லக்மலின் பந்து வீச்சு இந்த தொடரில் அபாரமாக உள்ளது.
மேலும், குசால் மெண்டீஸ், பெராரா மற்றும் அணியின் தலைவர் உபுல் தரங்கா ஆகியோரை அந்த அணி பேட்டிங்கில் அதிகம் நம்பியுள்ளது.
தொடர்ந்து சொதப்பி வரும் ஜிம்பாப்வே அணியில் கிரைக் எர்வின் மற்றும் சிக்கிந்தர் ரசாவின் பேட்டிங் மெச்சும் வகையில் உள்ளது.
இதனிடையில் இந்த ஆட்டம் எங்களுக்கு மிக முக்கியமானது, நிச்சயம் இதை வெல்ல முயற்சிப்போம் என ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளர் ஹீத் ஸ்டீரீக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் இடையேயான ஆட்டமானது இன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.