மீண்டும் மண்ணை கவ்விய அவுஸ்திரேலியா: இமாலய வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இலங்கை

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
507Shares

இலங்கை- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 281 ஓட்டங்கள் எடுக்க, அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 106 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அவுஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுக்கும், இலங்கை தரப்பில் ஹேராத் ’ஹாட்ரிக்’ உடன் 4 விக்கெட்டும், தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில் 2வது இன்னிங்சை 175 ஓட்டங்கள் முன்னிலையில் தொடங்கிய இலங்கை அணி தட்டுத்தடுமாறி 237 ஓட்டங்கள் எடுத்தது. தில்ருவான் பெரேரா அதிகபட்சமாக 64 ஓட்டங்கள் எடுத்தார்.

அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த இன்னிங்சிலும் முத்திரை பதித்தார்.

413 ஓட்டங்கள் இலக்கு

இதனையடுத்து அவுஸ்திரேலிய அணிக்கு 413 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே பெரிய அடியாக அமைந்தது.

தொடக்க வீரர் ஜோ பார்ன்ஸ் (2) ஹேரத் சுழலிலும், அடுத்து வந்த நாதன் லயன் (0), உஸ்மான் கவாஜா (0) ஆகியோர் தில்ருவான் பெரேரா பந்திலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் அந்த அணி 10 ஓட்டங்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது. நேற்றைய ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 25 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அணித்தலைவர் ஸ்மித் (1), டேவிட் வார்னர் (22) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தில்ருவான் மிரட்டல்

3வது நாள் ஆட்டமான இன்று அவுஸ்திரேலியா 388 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் தொடர்ந்து விளையாடியது.

தில்ருவான் பெரேரா பந்துவீச்சில் மிரட்ட ஆரம்பித்தார். இதனால் அவுஸ்திரேலியா திணற ஆரம்பித்தது.

வார்னர் 41 ஓட்டங்களிலும் அணித்தலைவர் ஸ்மித் 30 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து இலங்கையின் 'சுழல்' தாக்குதலை சமாளிக்க முடியாமல் மிட்செல் மார்ஷ் (18), ஆடம் வோக்ஸ் (28), பீட்டர் நெவில் (24), மிட்செல் ஸ்டார்க் (26) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அவுஸ்திரேலியா 183 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இலங்கை அணி சார்பில் தில்ருவான் பெரேரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஹேராத் 2 விக்கெட்டும், சந்தகன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனால் இலங்கை அணி 229 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக தில்ருவான் பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments