சிகரங்களின் சமர் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி சம்பியன்

Report Print Kumar in கிரிக்கெட்

மட்டக்களப்பு சிகரங்களின் சமர் கிரிக்கெட் போட்டியில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணி வெற்றிபெற்று சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த கிரிக்கெட் போட்டி மட்டக்களப்பின் சிகரங்களின் சமர் என்னும் தலைப்பில் நேற்று (27) நடைபெற்றது.

07ஆவது ஆண்டாக மட்டக்களப்பு இந்து கல்லூரிக்கும் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையில் இந்த போட்டி நடைபெற்றது.

பெரியகல்லாறு மத்திய கல்லூரி அதிபர் என்.நல்லதம்பி தலைமையில் பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சிர் சி.தாண்டாயுதபாணி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம்,ஞா.கிருஸ்ணபிள்ளை,மா.நடராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

50 ஓவர்களைக்கொண்ட இந்த கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணி களத்தடுப்பினை தெரிவுசெய்தது.

இதனடிப்படையில் முதலில் துடுப்படுத்தாடிய மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது.

140 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் வீரர்கள் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் 120 ஓட்டங்களை மட்டுமே 41 ஓவர்களில் பெறமுடிந்தது.

இதன் அடிப்படையில் 19 ஓட்டங்களினால் மட்டக்களப்பு இந்துகல்லூரி வெற்றிவாகை சூடி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

கடந்த ஆண்டு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 06ஆவது சிகரங்களின் சமர் போட்டியில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா ,அவரவர் தேவைகளுக்கு ஏற்ப இடமாற்றங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

யுத்ததின் பின்னர் எமது கிராமங்கள் பல்வேறு வழிகளிலும் முன்னேறவேண்டிய தேவையுள்ளது. இந்த வகையில் பாடசாலைகளின் முயற்சிகள் வெற்றியளிக்கின்றது.

இந்த பாடசாலைகள் மென்மேலும் வளர்ச்சிப்போக்கினையடைவதற்கு மாகாணசபைகள் ஊடாகவும் பாராளுமன்றம் ஊடாகவும் முழு முயற்சிகளை எடுக்கவேண்டும்

பெரியகல்லாறு மத்திய கல்லூரி பாடசாலை ஒரு பெரிய பாடசாலையாகும். இங்கு இரண்டு விளையாட்டு உத்தியோகத்தர்கள் தேவையாகவுள்ளது.பல விளையாட்டுக்கள் இங்கிருக்கின்றன.

ஒரு பெண் விளையாட்டு உத்தியோகத்தரால் முற்றுமுழுதாக இந்தப் பாடசாலையின் தேவைகளை வழங்குவது என்பது இயலாத காரியமாகும்.

கடந்த வருடம் முதல் இந்தப் பாடசாலைக்காக ஒரு ஆண் விளையாட்டு உத்தியோகத்தரை நியமித்துத் தரும்படி இந்தக் கிராமத்து முக்கியஸ்தர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இங்கு கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். கல்வித் திணைக்களங்களில் இடமாற்றங்கள் மேற்கொள்கின்றபோது அந்தந்த இடத்திற்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து இடமாற்றங்களை வழங்குவதை விடுத்து அவரவர் தேவைக்கேற்ப இடமாற்றங்களை வழங்குவதை எதிர்காலத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தேவைகள் இருக்கின்ற இடத்தில் தான் அத்தேவைகளை நிவர்த்தி செய்கின்ற செயற்பாடுகள் அமைய வேண்டும். தேவைகள் இல்லாத இடத்தில் தேவையற்ற விதத்தில் சில இடமாற்றங்களை செய்வதனூடாக அந்த ஆசிரியர்களின் திறமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன.

இதனால் மாணவர்களின் கல்வியிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. அவ்வாறான ஒரு செயற்பாட்டின் காரணமாகவே இங்கு உடற்கல்வி ஆசிரியர் நியமனம்கூட நடந்திருக்கலாம்.

எனினும் ஒரு ஆசிரியரை நியமிப்பதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் அது நிறைவேறும் எனவும் கல்விப் பணிப்பாளர் கூறியிருக்கின்றார்.

இதனை நாங்கள் வரவேற்கின்றோம். அடுத்தமுறை நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியின் போது இரண்டு விளையாட்டு உத்தியோகத்தர்களின் முயற்சியினால் கல்லா பாடசாலை இந்த கிண்ணத்தை கைப்பற்றும் என நான் கருதுகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers