35 ஆயிரம் கோடி அபராதம் செலுத்த ஒப்புதல் தெரிவித்த பேஸ்புக்!

Report Print Kabilan in நிறுவனம்

பயனர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தியதாக பேஸ்புக் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 35 ஆயிரம் கோடி அபராதத் தொகையை செலுத்த அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விபரங்கள் திருடப்பட்டு, பிரித்தானியாவைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தினால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையம் நடத்திய விசாரணையின் முடிவில், பேஸ்புக் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது.

அதன் விளைவாக 5 பில்லியன் டொலர்கள் அபராதமாக செலுத்த வேண்டும் என்றும், பயனர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்படவில்லை என்பதை 3 மாதங்களுக்கு ஒருமுறை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதற்காக குழு அமைக்க வேண்டும் என்றும் சமரச உடன்படிக்கையின் படி உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், வர்த்தக ஆணையத்தின் நிபந்தனைகள் அனைத்தையும் பேஸ்புக் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், தனிநபர் விவரங்கள் பாதுகாப்பு நடைமுறைகளில் உள்ள அபாயங்கள் குறித்து, முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க தவறியதற்காக 690 கோடி அபராதத்தினை, பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் பேஸ்புக்கிற்கு விதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்ட அபராதத்தினை செலுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்