வாகன புகையால் மூளையில் இரும்புத்துகள் படிகிறதா?

Report Print Maru Maru in சமூகம்
35Shares

நகரங்களில் அதிக வாகனங்களால் ஏற்படும் புகை, அதை சுவாசிக்கும் மனிதர்களுக்குள் சென்று மூளையை பாதிக்கிறது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நகரங்களில் நெரிசலான வாகன மிகுதியாலும் அதிலும் சில வாகனங்களில் சரிசெய்யப்படாத பழுதடைந்த இஞ்சின்களாலும் காற்று மாசுபடுகிறது.

அதனால் அதை சுவாசிக்கும் மக்களுக்கு சைனஸ், அலர்ஜி, ஆஸ்துமா, காசநோய், இதயநோய் போன்ற பல வியாதிகள் ஏற்படுகிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

ஆனால், புகையில் உள்ள நுண்ணிய துகள்கள் மூளையை சென்று தாக்குகிறது என்பது ஐக்கிய ராஜ்ஜிய விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளியாகியிருப்பது எல்லோருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

வாகன புகை மிகுந்த இடத்தில் வாழும் பாதிக்கப்பட்ட மனிதர்களை பரிசோதித்ததில், சாதாரண கண்களுக்கு புலப்படாத சின்னஞ்சிறு இரும்புத் துகள்கள் மூளையில் படிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிராம் மூளைத்திசுவில் மில்லியன் கணக்கில் இவை படிந்திருக்கின்றன. இவை நிச்சயமாக அந்த செல்களை பாதித்து மூளைக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த துகள்கள் மேக்னடைட் என்றும் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

அடர்வான வாகன புகையில் பெரிய மற்றும் சிறிய துகள்கள் அடங்கி இருக்கின்றன. சுவாசிக்கும் போது மொத்தமாக மூக்கினால் உள்வாங்கப்படுகின்றன.

இதில் சிறியவை நுரையீரல் மூலம் ரத்தத்துக்குள் நுழைகிறது. அதனினும் மிகச்சிறிய நுண்ணியவை மூக்கிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வழியாக மூளையில் சென்று படிகின்றன. என்பது தெரிய வந்துள்ளது.

இந்த படிவுகளினால் ஏற்படும் மாசு அல்லது பாசி போன்ற விளைவு மூளைச்செல்களுக்கு இடையிலான தொடர்புகளை தடுக்கும். அது முளையின் செயலாற்றலை பலவீனப்படுத்தும்.

அல்சைமர்ஸ் போன்ற நோய்கள் உருவாக நச்சுப்புகையினால் ஏற்படும் இந்த படிவுகள் நிச்சயம் முதன்மை காரணங்களில் ஒன்றாக இருக்கும். என கணிக்கப்படுகிறது.

இந்த ஆய்வு ஒரு ஆரம்பகட்ட அதிர்ச்சிதான். அதனால், அல்சைமர்ஸ் நோய்க்கும் மேக்னடைட் துகள்களுக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பது அடுத்தநிலை ஆய்வில்தான் தெரியவரும்.

புகையினால் மூளை பாதிக்கிறது என்ற திருப்பம் ஆய்வாளர்களுக்கு புதிய ஆய்வு களத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனிதனுக்கு வாகனம் அவசியம், அதைவிட மூளையின் ஆரோக்கியம் அத்தியாவசியம். எதற்காக எதை இழப்பது என்பதை எதிர்கால ஆய்வுகள்தான் முடிவு செய்யும்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments