சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறுவர்களின் துவிச்சக்கரவண்டி பேரணி

Report Print Theesan in சமூகம்


கிளிநொச்சி

சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியின் பலபகுதிகளிலும் கொண்டாடப்பட்டது.

கிளிநொச்சியில் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கழகங்களிலும் சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக கொண்டாடப்பட்டன. குறித்த நிகழ்வுகளின் போது மயிலாட்டம், பொய்க்கால், குதிரையாட்டம், பொம்மலாட்டம், மங்கள வாத்தியம்,பாடல் , நடனம்,நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் சிறுவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கிழக்கு மாகாணம்

சர்வதேச சிறுவர் தினம் கிழக்குமாகாணத்தின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது.

சம்மாந்துறை,கிண்ணியா மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களில் சிறுவர் மற்றும் முதியோர் தினம் கொண்டாடப்பட்டது.குறித்த நிகழ்வுகளில் அதிகளவில் சிறுவர்கள் கலந்து கொண்டு தமக்கான நாளை மகிழ்வுடன் கொண்டாடினர்.

முல்லைத்தீவு

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர் தின நிகழ்வுகள் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் பங்கேற்றிருந்தார்.நிகழ்வில் முல்லைத்தீவு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி உமாநிதி புவனராஜா மற்றும் பாடசாலை மாணவர்கள் அதிபர் ஆசிரியர்கள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள்,அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள் உள்ளிடட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் வில்லிசை நிகழ்வு மற்றும் நாடக நிகழ்வுகளுடன் பாடல்கள் கவிதை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

சம்மாந்துறை

உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் மாபெரும் சிறுவர் தினவிழா நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் மக்கள் வங்கியும் இணைந்து ஏற்பாடுசெய்த மட்டக்களப்பு சிறுவர்களுக்கான துவிச்சக்கர வண்டி சவாரி நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் கே.வாசுதேவன் தலைமையில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.

சிறுவர் தினத்தில் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தினையும் அவர்களின் சுதந்திரத்தினையும் உறுதிப்படுத்தவும் இந்த துவிச்சக்கர வண்டி பவனி முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச செயலகத்தில் ஆரம்பமான இந்த துவிச்சக்கர வண்டி பவனி நகர் ஊடாக சென்று மீண்டும் பிரதேச செயலகத்தினை வந்தடைந்தது.

வவுனியா

சர்வதேச சிறுவர் தினம் இன்றாகும்.சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

"பிள்ளையின் வெற்றிக்கு நட்பான நாடு" என்னும் தலைப்பில் இம்முறை சர்வதேச சிறுவர் தினம் நாடுமுழுவதும் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இதன் கீழ் வவுனியா நகர பாடசாலை மாணவர்களை உள்ளடக்கியதான துவிச்சக்கரவண்டி பேரணியொன்று காலை 7 மணிக்கு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்திலிருந்து ஆரம்பமாகியிருந்தது.

இந்த பேரணி கந்தசாமி கோவில் வீதி வழியாக இறம்பைக்குளம் மகளீர் பாடசாலையை அடைந்து, அங்கிருந்து இலங்கை திருச்சபை வித்தியாலம், முஸ்லிம் மகாவித்தியாலம், சைவபிரகாசா மகளீர் பாடசாலை ஆகியவற்றிற்கு சென்று அப்பாடசாலைகளின், மாணவர்களையும் இணைத்து கொண்டு வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றுள்ளது.

அந்தவகையில், வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி, மாணிக்கஇலுப்பைக்குளம் ஆரம்ப பாடசாலைகளிலுள்ள மாணவர்களுக்கு இன்று ஓமந்தை பொலிஸாரின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் பாடசாலைக்குமின்விசிறிகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்வுகளில் உதவி மாவட்டசெயலர் ந.கமலதாஸ், ஒமேக நிறுவனத்தின் பிரதிநிதி சமன் ஜெயசிங்க, வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகள், மாவட்ட செயலக கணக்காளர் பாலகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

திருகோணமலை

திருகோணமலை, அஸ் - ஸபா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக பாடசாலை அதிபர் முகம்மட் பைசர் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது சிறுவர்களின் விளையாட்டுப் போட்டிகள், பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வகையிலான ஊர்வலம் மற்றும் சிறார்களின் நிகழ்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கந்தளாய் கோட்டக் கல்வி அதிகாரி எம்.ரீ.எம்.தாரீக் மௌலவி, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கிளிநொச்சி

கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இன்று கொண்டாடப்பட்டன.

கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து சிறார்களிற்கு மாலை அணிவித்து நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்