வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த உற்சவம் எதிர்வரும் ஜுலை 03ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை 18ஆம் திகதி சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

ஜுலை மாதம் 8ஆம் திகதி 1009 சங்குகளுடன் சங்காபிசேகம் நடைபெறவுள்ளது.

கிழக்கின் தென்கோடியில் நாநிலங்களின் மத்தியில் மனோரம்மியமான சூழலில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவ கிரியைகள் யாவும் ஆலய பிரதமகுரு ஈசானசிவாச்சாரியார் ஆகமப்பிரவீணா சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளன.

கொடியேற்ற திருவிழாவன்று மலைத்திருவிழா, மயில் திருவிழா, தேர்த்திருவிழா போன்ற சிறப்பு திருவிழாக்கள் நடத்தப்படவுள்ளன.

அன்றைய தினம் காரைதீவு உகந்தை யாத்திரீகர் சங்கத்தினரின் அன்னதான நிகழ்வு காரைதீவு மடத்தில் இடம்பெறவுள்ளது.

பொத்துவில் பாணமை தம்பிலுவில் திருக்கோவில் அக்கரைப்பற்று மண்டுர் 13ஆம் கொலனி காரைதீவு பெரியகல்லாறு சேனைக்குடியிருப்பு நாவிதன்வெளி துறைநீலாவணை தம்பட்டை ஆகிய ஊர்களின் மக்கள் இத்திருவிழாக்களை நடத்துவார்கள்.

பகல் திருவிழா காலை 7 மணி தொடக்கமும் இரவு திருவிழா மாலை 5 மணி தொடக்கமும் இடம்பெறவுள்ளது.

18ஆம் திகதி சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது. விழாக்காலங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆலய செயலாளர் கே.சிறிபஞ்சாட்சரம் கூறியுள்ளார்.

உகந்தமலை முருகனாலயத்திலிருந்து கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை எதிர்வரும் 27ஆம் திகதி திறந்து விடப்பட உள்ளது. மீண்டும் ஜுலை 9ஆம் திகதி மூடப்படும்.

ஆலய ஆடிவேல்விழா தொடர்பில் இறுதிக்கட்ட கூட்டம் கடந்த 10ஆம் திகதி ஆலய வளாகத்தில் ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க தலைமையில் நடைபெற்றுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்