மாணவர்களது கல்வி மேம்பாட்டில் ஆசிரியர், பெற்றோர்களுக்கு இடையிலான தொடர்பு மிக அவசியம்!

Report Print Kaviyan in சமூகம்

மாணவர்களது கல்வி மேம்பாட்டில் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இடையிலான இடைத்தொடர்பு என்பது மிகமுக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி - ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நேற்றைய தினம் பாடசாலை அதிபர் ம.உமாசங்கர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

விளையாட்டு என்பது ஒரு மனிதனை வளப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகின்றது. மனிதன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உதவுகின்றது. மனிதர்கள் நற்பண்புடையவராக வாழ்வதற்குப் பெரிதும் துணைபுரிகின்றது.

அந்த வகையில் பாடசாலைகளில் இணைபாடவிதான செயற்பாடுகளில் ஒன்றாகக் காணப்படும் விளையாட்டுச் செயற்பாடுகள் மாணவர்களது உடல், உள மேம்பாட்டில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

இன்றைய தினம் இப்பாடசாலையில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் எமது மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், உச்சாகமாகவும் செயற்பட்டதனை அவதானிக்க முடிந்தது.

ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள இப்பாடசாலையில் பல்வேறுபட்ட வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்றதனை அவதானிக்க முடிகின்றது.

இருப்பினும் இப்பகுதி பெற்றோர்களது ஆதரவுடனும், அதிபரது சீரான திட்டமிடப்பட்ட முகாமைத்துவத்தினூடாகவும், ஆசிரியர்களது அர்பணிப்பான செயற்பாடுகளின் மூலமும் மாணவர்களது கல்வி நிலையிலும், விளையாட்டுச் செயற்பாடுகளிலும் இந்தச் சிறுவர்கள் சிறப்புற்று விளங்குகின்றார்கள்.

விளையாட்டுச் செயற்பாடுகளின் மூலம் மாணவர்களது உள்ளமும், உடலும் உறுதியாக்கப்படுகின்றது. வெற்றியையும், தோல்வியையும் சமமாக மதிக்கின்ற பெரிய பண்பை விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் எமது மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது.

இதனால் இந்தச் சிறுவர்கள் எதிர்காலத்தில் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வாழக்கூடிய பண்பைப் பெற்றுக்கொள்கின்றார்கள் என்பதே உண்மை.

இவ்விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆசிரியராக, அதிபராக செயற்பட்டு கல்விக்குப் பெரும் பங்காற்றியவர்.

தற்போதும் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு எமது மாணவர்ச் செல்வங்கள் கல்வியில் மேம்பாடடைய வேண்டும் என்பதற்காக தன்னாலான பெரும்பங்களிப்பை ஆற்றி வருகின்றார்.

இப்பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களது சேவை மிகவும் போற்றத்தக்க அர்ப்பணிப்பானது. ஏனெனில் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறுபட்ட வளப்பற்றாக்குறைகளைக் கொண்ட இக்கிராமப்புறப் பாடசாலைக்கு வந்து கற்பிக்கின்ற ஆசிரியர்களது செயற்பாடு மிகவும் உயர்ந்த அர்ப்பணிப்பானது.

அதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் தூரப் பகுதிகளிலிருந்து வந்து இங்குள்ள மாணவர்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர்களது சேவை என்றென்றும் நன்றியுணர்வுடன் போற்றிப் பேணத்தக்கது.

இங்குள்ள அனைத்து ஆசிரியர்களுமே சிறந்த முறையில் செயற்படுகின்றார்கள். ஒரு பாடசாலை எப்படிச் செயற்பட வேண்டும் என்பதற்கு இப்பாடசாலையின் செயற்பாடுகள் எடுத்துக்காட்டாக அமைகின்றன.

நாம் எந்த நிலைக்குச் சென்றாலும் எமது நிலையை கைவிடக்கூடாது. நாங்கள் தமிழர்கள் எமது இனத்திற்கென ஒரு மொழி உண்டு, பண்பாடு உண்டு, கலாசாரம் உண்டு, தனித்துவம் உண்டு என்பதை நாம் அனைவரும் எக்காலத்திலும் மறந்துவிடக்கூடாது எனவும் அவர் தெரிவிததுள்ளார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துக்கொண்டுள்ளார்.

கௌரவ விருந்தினர்களாக கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் சி.சுப்பையா, எஸ்.ஜே.87 நிறுவன கிளிநொச்சிக்கான இணைப்பாளர் டேகலா என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers