அம்பாறை மாவட்டத்தில் சுனாமி நினைவு தின நிகழ்வு

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கரையோர மாவட்டங்களில் ஈரமல்லா பேரலையின் கோரப்பசிக்கு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்ட நினைவு நாள் இன்றாகும்

சுனாமி எனும் ஆழிப்பேரலையால் உயிர் நீத்த 14ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

கல்முனை

கல்முனை பிரதேசத்தின் சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 8:50 மணியளவில் ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் உயிரிழந்தோரின் உறவுகளால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த அஞ்சலி நிகழ்வு கல்முனை ஷைனிங் விளையாட்டு கழகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

கல்முனை பிரதேசத்தில் 1650 மேற்பட்ட உயிர்கள் 2004ஆம் ஆண்டு சுனாமியால் காவு கொள்ளப்பட்டிருந்தனர்.

இந்த நினைவஞ்சலியில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் ஜே.கே.அதிசயராஜ், கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ராஜன் மற்றும் உயிர் நீத்தவர்களின் உறவுகளும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

காரைதீவு

14ஆம் வருட சுனாமி நினைவுதின நிகழ்வு காரைதீவு கடற்கரையில் இன்று இடம்பெற்றுள்ளது.

கடற்கரையிலுள்ள நினைவுத்தூபி முன்றலில் சுனாமி சுடர்கள் ஏற்றப்பட்டு விசேட பூஜை நிகழ்த்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து உயிரிழந்த உறவுகளால் கடலுக்குள் சென்று சுனாமி புஸ்பாஞ்சலி நிகழ்த்தப்பட்டுள்ளது.

காரைதீவு மீனவர் சமூகமும் இந்து சமய விருத்திச் சங்கமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

காரைதீவு பிரதேச செயலாளர் வெ.ஜெகதீசன், தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்ததுடன் ஆலய பிரதம குருக்களான சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள், சிவஸ்ரீ சாந்தருபன் ஜயா ஆகியோர் ஆத்மார்த்த பூஜைகளை நடத்தியுள்ளனர்.

பெருந்திரளான காரைதீவு மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலதிக செய்திகள் - நேசன்

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers