கிளிநொச்சியில் புதிய வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Report Print Yathu in சமூகம்

செவட்ட செவன நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புதிய வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கரைச்சி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் இன்று நடைபெற்றுள்ளன.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 82வீடுகளிற்கும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 59 வீடுகளிற்கும், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 12வீடுகளிற்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடுகளிற்கான அடிக்கல்லினை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டி வைத்துள்ளார்.

கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் முறிப்பு பகுதியில் 12வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன்,

வீடமைப்பு திட்டத்தின் கீழ் 5000இற்கும் மேற்பட்ட வீடுகள் அமைத்து கொடுக்கப்படுகின்றன. ஆனால் கடந்த கால அரசாங்கம் என்னத்தை செய்தது.

வெறுமனே வீதியை போட்டார்கள், புகையிரதத்தை வரச்செய்தார்கள், யாழ்ப்பாணத்தில் கொட்டல் ஒன்றை அமைத்தார்கள்.

அது இப்போது பயன்பாடு இல்லாது உள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு எதையும் அவர்கள் செய்யவில்லை.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கிறிஸ் பூதம் என பல்வேறு தொல்லைகள் இருந்தன. நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் அவற்றுக்கு சாதகமான சூழல் இல்லாமையால் வாள்வெட்டுக்கள் ஊடாக மக்களிற்கு தொந்தரவுகளை கொடுக்கின்றனர்.

கடந்த அரசாங்கம் அபிவிருத்தி என்ற போர்வையில் போதைப்பொருளையும் நன்கு அபிவிருத்தி செய்துள்ளது. யுத்தம் என்ற போர்வையில் விடுதலை புலிகளை அழிப்பதாக கூறி அப்பாவி மக்களை இன அழிப்பு செய்தனர்.

விடுதலை புலிகளை இனங்கண்டு அழிக்காது அப்பாவி மக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஏதோவொரு உயிரிழப்போ அல்லது அங்கவீனராக்கப்பட்டோ அல்லது உடல் முழுவதும் செல் துவாளைகளை கொண்டோ வாழும் குடும்பங்களே உள்ளன.

இவ்வாறானவர்களிற்கு உதவ கடந்த கால அரசு செயற்படவில்லை. இதேவேளை, சஜித் பிரேமதாஸ தமது அமைச்சின் ஊடாக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். அவருடைய தந்தை ஜனாதிபதியாக இருந்துள்ளார்.

அவரது காலத்தில் இவ்வாறான வீட்டுதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. சஜித்தும் ஜனாதிபதியாக வந்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவார் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நிகழ்வில் அரசாங்க அதிபர் தெரிவிக்கையில்,

பதின் மூவாயிரம் வீடுகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையான நிலையில் இவ்வாறு கட்டப்படும் வீடுகளினால் ஓரளவு மக்களின் வீட்டு பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

அமைச்சர் சஜித் கிளிநொச்சிக்கு வருகைதந்தபோது 50 புதிய கிராமங்களை உருவாக்கும் திட்டத்தினை மேற்கொள்ளுமாறு பணித்தார்.

அந்தவகையில் தொடர்ச்சியாக திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers