குடிநீருக்கு தட்டுப்பாடு! பெரும் சிரமப்படும் குஞ்சுக்குளம் பகுதி மக்கள்

Report Print Theesan in சமூகம்

மன்னார் - மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் மழை இல்லாததன் காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் தெவித்துள்ளனர்.

இதனால் குடி நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் எதிர் நோக்கியுள்ள பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு குஞ்சுக்குளம் பகுதி மக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஆங்காங்கே காணப்படும் சிறு குளங்கள் வற்றி விட்டதனால் கிணத்தடி நீர் ஊற்றுக்களில் நீர் சுரப்பதில்லை, இருப்பினும் எடுக்கப்படும் நீரில் அதிக கல்சிய படிவுகள் காணப்படுவதால் சிறுநீரக நோய்கள் ஏற்படும் அபாயத்தை குஞ்சுக்குளம் மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே உரிய அதிகாரிகள் விரைவாக செயற்பட்டு நீர் தாங்கியின் மூலம் சுத்தமான குடிநீர் தந்து குஞ்சுக்குளம் மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் தி.பரஞ்சோதியிடம் வினவிய போது,

குடிநீர் பிரச்சினையானது மன்னார் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ளது.

அந்த வகையில் நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நீர் தாங்கிகள் மூலம் குடி நீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களும் குடிநீர் பிரச்சினையை சந்தித்துள்ளமையால் நீர் தாங்கிகள் பற்றாக்குறையாக உள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை சபையின் சிறப்பு அமர்வில் கலந்துரையாடிய பின் குஞ்சுக்குளம் மற்றும் நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என பிரதேச சபையின் தலைவர் தி.பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...